செய்திகள்

தமிழக அரசியலில் நிலவும் குழப்பமான சூழலில் கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி

Published On 2017-02-12 13:53 IST   |   Update On 2017-02-12 13:53:00 IST
தமிழக அரசியலில் நிலவும் குழப்பமான சூழலில் கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சீர்காழி:

சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.கடந்த 5-ந் தேதி அ.தி.மு.க.வில் சட்டமன்றகுழு தலைவரை தேர்ந்தெடுத்தனர். இததை தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. அப்போது தமிழகத்தில் இருந்திருக்க வேண்டிய கவர்னர் மராட்டிய மாநிலத்திற்கு சென்றுவிட்டார். கிட்டதட்ட 5 நாட்கள் கழித்துதான் தமிழகம் வந்தார். இது பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் செய்யும் காரியம் அல்ல. அ.தி.மு.க.வில் தற்போது அதிகாரம் தொடர்பான ஒரு மோதல் வலுத்திருக்கிறது. யார் முதல்வர் ஆகவேண்டும் என மோதல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு கவர்னரும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் நெருக்கடியின் போது கவர்னருக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. கவர்னர் வித்யாசாகர்ராவ் இருதரப்பிடமும் பேசி 2 நாள் ஆகிவிட்டது. எந்த முடிவும் அறிவிக்கவில்லை.

இது திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கவர்னரின் காலதாமதத்தால்தான் சசிகலா தரப்பு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை ஒரு இடத்தில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனி கவர்னர் மத்திய அரசு நியமிக்க வேண்டும்.தமிழகத்தில் நிலவும் குழப்பமான சூழலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டும். அரசியலமைப்புக்கு எதிரான போக்கு ஏற்பட்டு விடக்கூடாது. அதிகார போட்டியால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. பெரும்பான்மை யாருக்கும் இல்லை. எவராலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது. இதில் காலம் தாழ்த்துவது கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பால்ராஜ்ரத்தினம், ஈழவளவன், தாமுஇனியவன், ஆசைதம்பி, தினேஷ்மேத்தா, காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News