செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய வீரரை மு.க.ஸ்டாலின் பாராட்டியபோது எடுத்தபடம்.

ஜல்லிக்கட்டு பார்க்க வந்தேன்: மல்லுக்கட்டு பற்றி பேச வரவில்லை- மு.க.ஸ்டாலின்

Published On 2017-02-10 05:28 GMT   |   Update On 2017-02-10 05:28 GMT
ஜல்லிக்கட்டு நேரத்தில் அ.தி.மு.க.வில் நடக்கும் மல்லுக்கட்டு குறித்து பேச விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு பார்க்க வந்தேன் என அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதுரை:

அலங்காநல்லூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டை பார்க்க தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். இன்று காலை 9.30 மணியளவில் அவர் மதுரையில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வந்து சேர்ந்தார்.

வழிநெடுகிலும் அவரை ஏராளமான தி.மு.க. வினர் திரண்டு நின்று வரவேற்றனர். அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல ஆண்டுகளுக்கு முன்பு அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை பார்த்து உள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதற்காக கடந்த ஜனவரி 3-ந் தேதி அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நான், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நடக்கும் போது நானும் ஜல்லிக்கட்டு போட்டியை காண நேரில் வந்து பங்கேற்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வகையில் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றி இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.

நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடக்கும் சூழ்நிலை இன்னும் முடிவாகவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதில் தீர்வு காணப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடத்த வேண்டும். இதற்கு தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

நான் அரசியல்வாதியாக இங்கு வரவில்லை. அரசியலும் செய்யவில்லை. இது அ.தி.மு.க., தி.மு.க. ஜல்லிக்கட்டு அல்ல. தமிழர்களின் பண்பாட்டை காக்க - பாராம்பரியத்தை நிலை நாட்ட ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து நிருபர்கள், தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ள உட்கட்சி குழப்பம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, ஜல்லிக்கட்டு நேரத்தில் அ.தி.மு.க.வில் நடக்கும் மல்லுக்கட்டு குறித்து பேச விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு பார்க்க வந்தேன் என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கேலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தார். அவருடன் எம்.எல் .ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Similar News