செய்திகள்

ரூபெல்லா தடுப்பூசி குறித்து வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

Published On 2017-01-30 07:29 GMT   |   Update On 2017-01-30 07:29 GMT
அடிப்படை ஆதாரம் இல்லாமல் ரூபெல்லா தடுப்பூசி குறித்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

காந்தியடிகள் நினைவு நாளான இன்று தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்தது.

இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

தொழுநோயை ஒழிப்பதற்காக 1983 முதல் கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப நிலையிலேயே தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும்போது குறைபாடற்ற சமுதாயத்தை உருவாக்கலாம். இதற்கான முயற்சி தான் ‘ஸ்பர்ஷ்’ தொழுநோய் விழிப்புணர்வு முகாம்.

இன்று முதல் பிப்ரவரி 13-ந்தேதி வரை தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும். தமிழகத்தில் கடந்த வருடத்தில் 4925 தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து ஊனம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து தொழுநோய் அறிகுறி உள்ளவர்களை பொது சுகாதார ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி தொடர் கூட்டு மருந்து சிகிச்சை வழங்கி தொழுநோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.

தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் பிப்ரவரி 6 மற்றும் 28-ந்தேதியில் நடைபெற உள்ளது. ஒரு கோடியே 80 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி இந்த தடுப்பூசி முகாம் நடைபெறும்.

அடிப்படை ஆதாரம் இல்லாமல் ரூபெல்லா தடுப்பூசி குறித்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்குனர் செங்குட்டுவன், தொழு நோய் திட்ட கூடுதல் இயக்குனர் இந்துமதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News