செய்திகள்

தமிழக அரசை பா.ஜனதா பொம்மையாக இயக்குகிறது: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

Published On 2017-01-28 04:18 GMT   |   Update On 2017-01-28 04:18 GMT
தமிழக அரசை பா.ஜனதா பொம்மையாக இயக்குகிறது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர். எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர். எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் கடைசி நாளில் காவல்துறையினர் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கலைக்க தடியடி நடத்தினர், அதன் பின்பு ஏற்பட்ட பல சம்பவங்களில் காவல்துறையினரின் பங்கு அதிகம்.

அனைத்து சமூகத்தினர் பங்கேற்ற ஒரு போராட்டத்தில் ஒரு சில புத்தி பேதலித்தவர்கள் செய்த செயலை வைத்து போராட்டங்களில் பங்கெடுத்தவர்களை சமூக விரோதிகளாக சித்தரித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

போராட்டக்காரர்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டார்கள் என ஆதாரங்களைக் காண்பிக்கும் தமிழக முதல்-அமைச்சர், காவல்துறையினர் செய்த ஆட்டோ எரிப்பு, குடிசைக்குத் தீ வைப்பு, வாகனங்களை கண்மூடித்தனமாக தாக்கி சேதம் செய்தது போன்றவற்றின் ஆதாரங்களை சட்டமன்றப் பேரவையில் வெளியிடாதது ஏன்?

காவல்துறையினர் செய்த வன்முறைகளைப் பூசி மொழுகி, அவர்களைக் காப்பாற்ற ஒரு சமூகத்தினரை, குறிப்பாக சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தினரை நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கான குற்றவாளியாக்க தமிழக அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மனிதநேய அடிப்படையில் உணவுகளையும், குடிநீரையும் வழங்கிய பல சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டிருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்களைப் பார்க்கும் போது தமிழகத்தில் பா.ஜனதா முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசை தனது பொம்மை அரசாக மத்திய பா.ஜ.க. அரசு இயக்கி வருகிறது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிய வருகிறது.

இதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை ஆட்சியாளர்கள் நன்கு புரிந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News