செய்திகள்

தமிழக அமைச்சர்கள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை மாற்ற சொல்வது நல்லதல்ல: திருநாவுக்கரசர்

Published On 2016-12-26 08:12 GMT   |   Update On 2016-12-26 08:12 GMT
முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை மாற்ற வேண்டும் என்று பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது நல்லதல்ல என்று திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கும் போது ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இதுபற்றி பா.ஜனதா அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து தெரிவிக்கிறார்கள். தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடைபெற வழி வகை செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். படகுகள் விடுவிக்கப்படாததால் பழுதாகி நிற்கின்றன. அதற்கு இலங்கை அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். இதற்கு மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடக்கிறது. இதில் மத்திய அரசு பணம் மதிப்பு குறைத்தது பற்றி விவாதிக்க உள்ளோம்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் விவாதிப்பேன். தேவையான நிர்வாகிகள் மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும்.

வார்தா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவோ, அமைச்சர் குழுவோ இன்னும் வரவில்லை. இனி அவர்கள் வந்து எந்த சேதத்தை பார்ப்பார்கள். வேண்டுமானால் புயல் பாதிப்பு வீடியோவையும் புகைப்படத்தையும் பார்க்கலாம்.

தமிழகத்தை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. புயல் நிவாரண நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. முன் பணமாக 5 ஆயிரம் கோடியில் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை உடனடியாக வழங்க வேண்டும்.

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் செய்தவர்ககளிடம் சோதனை செய்வது சரியானதுதான். அது வரவேற்கத்தக்கது.

பழைய ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்தது கண்டனத்திற்குரியது. அவர்கள் அ.தி.மு.க.வினர் போல செயல்பட்டு உள்ளனர்.

முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை மாற்ற வேண்டும் என்று பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது நல்லதல்ல. முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்றால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News