செய்திகள்

புறவாசல் வழியாக அதிகாரம் செலுத்த பா.ஜனதா முயற்சி செய்யவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2016-12-09 08:38 IST   |   Update On 2016-12-09 16:31:00 IST
தமிழக ஆட்சியில் புறவாசல் வழியாக அதிகாரம் செலுத்த பா.ஜனதா முயற்சி செய்யவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை பார்க்க வந்த மக்கள் இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் தமிழகத்துக்கு நன்மதிப்பை ஏற்படுத்தி தந்து இருக்கிறார்கள். இறுதி ஊர்வலம் எந்த விதமான குழப்பமும் இன்றி அமைதியாக நடைபெற ஏற்பாடு செய்த அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் எந்தவித குழப்பமும் இன்றி மக்கள் நலனில் அக்கறையுடன் அரசும், கட்சியும் செயல்பட வேண்டும். மற்ற கட்சிகளும் அதே எண்ணத்தில் இருக்க வேண்டும். புதிய முதல்-அமைச்சர் மக்கள் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஊழலற்ற ஆட்சியை கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும் என்பது எங்கள் கட்சியின் கோரிக்கை ஆகும்.

தமிழக அரசுக்கு மத்திய அரசு நேர்மையாக தேவையான உதவிகளை செய்யும் என பிரதமர் கூறி உள்ளார். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பா.ஜனதா தலையிடுகிறது. புறவாசல் வழியாக அதிகாரம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பா.ஜனதா முயற்சிக்கிறது என்ற யூகங்கள் உலா வருகின்றன. அப்படி எதுவும் கிடையாது.

தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை மதிக்கக்கூடிய அரசாக மத்திய பா.ஜனதா அரசு உள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை பலப்படுத்த நேரடியாக திட்டங்களை வகுத்து வருகிறோம். புறவாசல் வழியாக எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தும் எண்ணம் கிடையாது. தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தலைமை வலுவாக இருக்கிறது. இடைத்தேர்தலில் 3-வது சக்தியாக உருவெடுத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News