செய்திகள்

பாராளுமன்றத்தில் மோடி பதில் சொல்லாமல் தவிர்ப்பதா?: ஜி.கே.வாசன் கண்டனம்

Published On 2016-11-29 14:56 IST   |   Update On 2016-11-29 16:04:00 IST
ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்லாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது என்று ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. மாவட்ட தலைவர்கள் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

சங்க தலைவர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம், ஞானசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல்சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 34 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் சென்னையை சேர்ந்த 8 மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்ற ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு என்ற மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்து உள்ளது. ஆனால் சாதாரண மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.

ஆனால் நகரம் முழுவதும் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இதற்கு மோடி பாராளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்லாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது.

சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முறையை மத்திய அரசு கைவிட வேண்டும். இது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நலன் அறிந்த வி‌ஷயம், விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அரசு நிறுத்தி வைத்திருப்பது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News