திருப்பரங்குன்றத்தில் பணம் மாற்ற வங்கியில் காத்திருந்தவர்களிடம் மு.க.ஸ்டாலின் குறை கேட்டார்
சென்னை:
எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட நல்லூரில் உள்ள பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் இருந்து பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களை கண்டதும் தனது வாகனத்தை நிறுத்தி பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு செல்லாததாக அறிவித்ததால் நடுத்தர, அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், காலை 6 மணி முதல் வங்கியின் வாயிலில் வரிசையில் நின்று காத்திருந்தும், 11 மணி வரை பணம் எடுக்க முடியாத நிலையில், பல மணி நேரங்களுக்கு நின்று அவதிப்படுவதாகவும், அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பொது மக்களுக்கு தேவையான பணத்தை வழங்குவதில் வங்கியாளர்களுக்கு உள்ள சிரமங்கள் குறித்து கேட்டு அறிந்தார். பொதுமக்கள் பணம் எடுப்பதில் தாமதம் செய்யாமல், விரைந்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை நீண்ட நேரம் காத்திருக்கும் சிரமத்திற்கு உட்படுத்தாமல் போதிய வசதிகளை வழங்க வேண் டும் என்றும் வங்கி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.