செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் அப்பீல் வழக்கு 3 வாரத்துக்கு ஒத்திவைப்பு

Published On 2016-11-15 13:42 IST   |   Update On 2016-11-15 13:42:00 IST
உள்ளாட்சி தேர்தல் அப்பீல் வழக்கை 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:

தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘தமிழக அரசு எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. அதேநேரம், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்பிரிவுகளை பின்பற்றி தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன். பஞ்சாயத்து சட்டவிதிகளை பின்பற்றி புதிதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்’ என்று அக்டோபர் மாதம் 4-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஹூலு வாடி ஜி.ரமேஷ், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு கடந்த அக்டோபர் 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனி நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

பின்னர், இந்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி, தி.மு.க. தரப்புக்கு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘இந்த வழக்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 27 பக்கங்களை கொண்ட கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். மேலும், உள்ளாட்சி தேர்தலில் எந்தந்த பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று விரிவான ஒரு மனுவை தயாரித்துள்ளோம். அந்த மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்றார்.

இதற்கு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்களில் கருத்தை நீதிபதிகள் கேட்டனர். அவர்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காததால், இந்த வழக்கை 3 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News