செய்திகள்

நான் கொள்ளை அடிக்கவில்லை - ஊழல் செய்யவில்லை: விஜயகாந்த் பேச்சு

Published On 2016-11-15 05:15 GMT   |   Update On 2016-11-15 05:15 GMT
நான் கொள்ளை அடிக்கவில்லை ஊழல் செய்யவில்லை என்று அரவக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவில் திடலில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் 114 ஆண்டுகளாக காவிரி பிரச்சினை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. காவிரியில் தண்ணீர் வருவதற்கு எந்த கட்சியினரும் முன்வர மாட்டார்கள்.

ஏனென்றால் காவிரியில் தண்ணீர் வந்தால் காவிரி டெல்டா மாவட்டங்கள் செழிப்படையும். கட்சிக்காரர்கள் மணல் திருட முடியாது. எனவே காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு எவரும் போராட மாட்டார்கள்.

விஜயகாந்த் கோபப்படுகிறார், அடிக்கிறார் என்று சிலர் பேசுகிறார்கள். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். நான் கொள்ளையடிக்கவில்லை. ஊழல் செய்யவில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள் என தே.மு.தி.க.வை பற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அவருக்கு சொல்கிறேன். அப்போதும், இப்போதும் எங்களுக்கு கண் கெடவில்லை. பாவம் அவர் கண்தான் கெட்டுவிட்டது.

சர்வ கட்சியினரும் ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா உள்ள அறைக்கு செல்லாமல் வெளியில் இருந்து பார்த்து விட்டு நன்றாக உள்ளார் என பொய் கூறுகிறார்கள். விஜயகாந்துக்கு பொய் சொல்ல தெரியாது.

ஜெயலலிதா நலம் பெற்று மீண்டும் ஆட்சி செய்ய எனது தெய்வம் முருகனை வேண்டுகிறேன்.

இந்த கூட்டத்திற்கு அதிக அளவில் பெண்கள் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரவக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும், நங்காஞ்சி ஆறு, தாதம்பாளையம் ஏரி ஆகியவற்றினை தூர்வார வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிப்பதை முறைப்படுத்த வேண்டும். அரவக்குறிச்சி ஆஸ்பத்திரியில் 24 மணிநேர மும் டாக்டர்கள் தங்கி இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவை அனைத்தும் நடைபெற வேண்டும் என்றால் நீங்கள் (மக்கள்) தே.மு.தி.க. வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில இளை ஞரணி செயலாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் தங்கவேல் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Similar News