செய்திகள்

குளிர்கால கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு மசோதா தாக்கல்: எச்.ராஜா

Published On 2016-11-07 10:43 IST   |   Update On 2016-11-08 15:49:00 IST
வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உறுதியளித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:-

டெல்லியில் ராணுவ வீரர் தற்கொலை விவகாரத்தில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், ஆம் ஆத்மி செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, காங்கிரஸ் கட்சி அலுவலகம் அல்ல. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்த பின்னர் ஒன் ரேங்க் ஒன் பென்‌ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பலர் பயனடைந்துள்ளனர்.

காந்தியின் கனவான காங்கிரஸ் கட்சியை கலைப்பது என்ற செயல் ராகுல் தலையெடுத்த பின்னர் அது நிறைவேற தொடங்கியுள்ளது.

பா.ஜனதாவுக்கு எதிர் காலம் இல்லை எனக்கூறும் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சிக்கு போன பின்னர் அங்கும் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. அரசியல் சாசனத்திலே பொது சிவில் சட்டம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அது தற்போது விவாதமாக மாறியுள்ளது. தலாக் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் பெண்கள் தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல் பா.ஜனதாவை குறை கூறி வருகின்றனர். மதபிரசாரம் செய்யும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி., மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

மூட்டை மூட்டையாக சென்னையில் பங்களாவில் இருந்து செல்வது குறித்து சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அதற்கு அவர் ஆதாரத்துடன் தெரிவித்தால் மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்.

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதிக்கம் இருக்கிறது. இதுகுறித்து அந்தந்த மாநிலங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக தி.மு.க. -காங்கிரஸ் கட்சியை யாரும் குறை கூற முன்வரவில்லை. ஆனால் பா.ஜனதா கொண்டு வரவில்லையே என கேள்வி எழுப்புகின்றனர். வருகிற குளிர்கால கூட்டத்தொடரில ஜல்லிக்கட்டு தொடர்பான மசோதா தாக்கல் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News