செய்திகள்

அ.தி.மு.க வேட்பாளர் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

Published On 2016-11-01 14:04 IST   |   Update On 2016-11-01 14:04:00 IST
அ.தி.மு.க வேட்பாளர் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார்.

அந்த தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் முருகுமாறன் போட்டியிட்டார். இந்த தேர்தலில், திருமாவளவனை விட 83 ஓட்டுகள் அதிகம் பெற்று, முருகுமாறன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து முருகுமாறன் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கு மனுவில், ‘ஆளும் கட்சியை சேர்ந்த முருகுமாறனுக்கு, அரசு அதிகாரிகள் ஆதரவாகவும், உடந்தையாகவும் தேர்தலின் போது செயல்பட்டனர். தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடந்தன. எனவே, முருகுமாறனின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை வருகிற நவம்பர் 21-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Similar News