காவிரி பிரச்சினை: பிரதமரை குறை சொல்லி திசை திருப்புகின்றனர்- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
ஆலந்தூர்:
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசுவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, நான் ஆகியோர் டெல்லி செல்கிறோம். தமிழகத்தில் நிலவும் காவிரி பிரச்சினை தொடர்பாக அவரிடம் விவாதிக்க உள்ளோம்.
காவிரி பிரச்சினையில் தமிழக பா.ஜனதா தொடர்ந்து விவசாயிகள் பக்கம் இருந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. ஆனால் காவிரி பிரச்சினையில் மத்திய அரசையும், பிரதமரையும் குறை சொல்லி திசை திருப்புகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசையும் அவர் குறை கூறி இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி நடத்தியது. அப்போது ஏன் அவர்கள் காவிரி பிரச்சினையை தீர்க்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கவில்லை என்று திருநாவுக்கரசர் விளக்கம் சொல்ல வேண்டும்.
காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக பா.ஜனதா உறுதியாக உள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்று அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே மாற்று முதல்-அமைச்சரோ அல்லது பொறுப்பு முதல்- அமைச்சரோ நியமிக்கப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.