செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: இல.கணேசன் பேட்டி

Published On 2016-09-29 07:09 IST   |   Update On 2016-09-29 11:04:00 IST
உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என இல.கணேசன் கூறினார்.
ஆலந்தூர்: 

மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு தேர்ந்து எடுக்கப்பட இருக்கும் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு புகுந்த வீடு மத்திய பிரதேசம் ஆகப்போகிறது. என்றாலும், பிறந்த வீடான தமிழகத்துக்கே முன்னுரிமை வழங்கி, தமிழர் நலனுக்காக குரல் கொடுப்பேன். அதில் காவிரியும் அடங்கும்.

போலீசார் அனுமதித்த இடத்தில் போராட்டம் நடத்தச் சென்றபோது தடையை மீறி போராட்டம் செய்ததாக கூறி பா.ஜனதா தலைவர்களை போலீசார் கைது செய்து இருப்பது கோழைத்தனமானது.

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளது. எனவே வேறு யாருடனும் கூட்டணி இல்லை.

எனக்கு டெல்லி மேல்-சபை எம்.பி.யாக வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி ஆகியோருக்கு எனது நன்றி. 30-ந்தேதி போபாலில் நான் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.

தேச நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக நான் இருப்பேன். இந்துத்வா கொள்கை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. அதை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். சுவாதி கொலை வழக்கை நீதிமன்றம் நேர்மையாக விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News