செய்திகள்

200 புதிய பேருந்து சேவை: ஜெயலலிதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

Published On 2016-09-21 12:44 IST   |   Update On 2016-09-22 17:11:00 IST
ஆர்.கே.நகர் தொகுதிக்கு 3 மகளிர் சிறப்பு பேருந்துகள் உட்பட 200 புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் விரிவடைந்து வருகின்றன.

பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்தல், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல், புதிய பணிமனைகளை துவக்கி வைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் மகளிர் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில், மகளிர் நலன் கருதி, பள்ளி கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 3 மகளிர் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 118 பேருந்துகள்.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 11 பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 4 பேருந்துகள், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 16 பேருந்துகள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 பேருந்துகள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 12 பேருந்துகள், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 37 பேருந்துகள், என மொத்தம் 45 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 200 புதிய பேருந்துகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், பூந்தமல்லி, செங்கல்பட்டு, திண்டிவனம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் (வடக்கு), பொள்ளாச்சி, ஊட்டி, கரூர், புதுக்கோட்டை, மதுரை (வடக்கு), திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் சிறப்பு செயலாக்கப் பிரிவுகளுக்கு 90 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 15 ஜீப்புகள்.

சென்னை (வட கிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் கும்மிடிப்பூண்டி, பண்ருட்டி, செஞ்சி, ஆம்பூர், இலுப்பூர், திருத்துறைப்பூண்டி, லால்குடி, அரவக்குறிச்சி, வால்பாறை ஆகிய பகுதி அலுவலகங்களுக்கு 56 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 10 ஜீப்புகள் என மொத்தம் 1 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 25 ஜீப்புகளை போக்குவரத்துத் துறை அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக முதல் - அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் பா. ராமமோகன ராவ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரகாந்த் பி காம்ப்ளே, மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News