தமிழகம்-கர்நாடக நீர் பிரச்சினையில் மத்திய நீர் பாசன மந்திரி சரியான முடிவு எடுப்பார்: தமிழிசை பேட்டி
தரங்கம்பாடி:
தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் திருக்கடையூர் கோவிலுக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டத்தை இயற்ற கூடிய சட்டமன்றத்தில் போட்டி சட்ட மன்றம் நடத்தியது தவறு என்பதாக நான் கருதுகிறேன். சபாநாயகர் உருவ பொம்மை எரிப்பு அநாகரீகமானது.
சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்தது தவறு. சட்ட மன்றத்தில் எதிர் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுவதை விட வெளி நடப்பு செய்யும் நிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தில் 20 ஆயிரம் போலீஸ் பணியிடம் காலியாக உள்ளது. இதனை போராட்டம் மூலம் பாரதீய ஜனதா முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றது.
எனவே போலீஸ் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.3 காவலர்கள் பணி செய்யும் இடத்தில் ஒரு காவலர் தான் உள்ளார். இதனால் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாமல் போகிறது.
காவலர்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்து கொள்ள சங்கம் அமைத்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என நான் நினைக்கிறேன். தமிழக - கர்நாடக நீர் பிரச்சினையில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் சரியான முடிவு எடுத்து சரி செய்வார்.
கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சியில் நதி நீர் பிரச்சினையை தீர்க்காமல் தற்போது விவசாயிகளிடம் சேர்ந்து போராட்டம் நடத்துவது கேலிக்கூத்து. தமிழகத்தில் குளம், ஆறுகளை தூர் வார வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் பலம் பொருந்திய கட்சியாக பாரதீய ஜனதா களம் இறங்கும். மக்களே ஓட்டு போட்டு மேயரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுத்தால் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.