செய்திகள்

காவல்துறை மானியக்கோரிக்கை மீது சட்டசபையில் நாளை மறுநாள் ஜெயலலிதா பதில் உரை

Published On 2016-08-20 02:42 GMT   |   Update On 2016-08-20 10:04 GMT
சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீது 22-ந் தேதி (நாளை மறுநாள்) முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் உரை நிகழ்த்துகிறார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் அரசுத்துறைகளின் மானியக்கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதமும், அதற்கு அமைச்சர்களின் பதில் உரையும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சரின் துறையான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மீதான மானியக் கோரிக்கையின் விவாதமும், பதில் உரையும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி நடத்தப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அது 22-ந் தேதிக்கு (நாளை மறுதினம்) மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சட்டசபையில் நேற்று அவை முன்னவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். 22-ந் தேதி அன்று சட்டசபையில் கேள்வி நேரத்தை நடத்தும் விதி தளத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கூறினார்.

அந்த தீர்மானத்தை சபாநாயகர் ப.தனபால், எம்.எல்.ஏ.க்களின் குரல் ஓட்டெடுப்புக்கு விடுத்தார். குரல் ஓட்டெடுப்பின் மூலம் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து 22-ந் தேதி அன்று கேள்வி நேரம் நிகழ்ச்சி நடைபெறாது என்று சபாநாயகர் அறிவித்தார்.

எனவே, 22-ந் தேதி அன்று எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நேரடியாக தொடங்கும். விவாதத்தின் பின்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுவார்.

அப்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், காவல்துறை தொடர்பான இந்த ஆண்டுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

Similar News