செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. வெளிநடப்பு

Published On 2016-08-17 07:56 GMT   |   Update On 2016-08-17 10:43 GMT
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மீண்டும் பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
சென்னை:

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட இருப்பது பற்றி சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன் பேசினார். பின்னர் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் பேசினார்கள்.

அதன் பிறகு பதில் அளித்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரிவாக பேசினார். அவர் பேசி முடித்ததும் துரைமுருகன் மீண்டும் மேகதாது பற்றி பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டார்.

உடனே சபாநாயகர், இதுபற்றி முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் அளித்து விட்டார். இதை பாராட்டி பேசுவதாக இருந்தால் பேசுங்கள் இல்லையேல் மீண்டும் அது பற்றி பேச அனுமதிக்க முடியாது என்றார்.

இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டார்கள். அப்போது துரைமுருகனுக்கும், சபாநாயகருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பின்பு துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக அனைத்து கட்சி குழு முதல்-அமைச்சர் தலைமையில் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அமைச்சர் பதில் திருப்தி அளிக்காததால் மீண்டும் பேச அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அவர் அ.தி.மு.க. அவைத்தலைவர் போல் நடந்து கொள்கிறார். முனுஆதி, க.ராசாராம், பி. எச்.பாண்டியன் போன்ற எத்தனையோ சபாநாயகர்களை பார்த்து விட்டோம். தற்போதைய சபாநாயகரிடம் நாணயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News