செய்திகள்

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.5 கோடி: எழும்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் 12 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை

Published On 2016-04-25 14:37 IST   |   Update On 2016-04-25 14:37:00 IST
தமிழகம் முழுவதும் தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள 16 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளரான விஜயகுமாரின் வீடு உள்ளது. இங்கு அவரது மகன்களான விஜய் கிருஷ்ணசாமி, ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று மாலை 5 மணி அளவில் இந்த வீட்டில் புகுந்த வருவாய் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ரூ.4 கோடியே 93 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது.

இந்த பணம் எங்கிருந்து வந்தது எப்படி? என்பது பற்றி விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அந்த வீட்டில் கூடுதலாக பணம் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் சோதனையும் நடத்தப்பட்டது.

இன்று அதிகாலை 5 மணி வரை விசாரணையும், சோதனையும் நீடித்தது. இதன் பின்னரே அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அ.தி.மு.க. பிரமுகர் விஜயகுமாரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பெரிய பைகளில் போட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில், ராயப்பேட்டையை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. இதனால் பிடிபட்ட பணம் பற்றி கூடுதலாக விசாரணை எதையும் அதிகாரிகளால் நடத்த முடியவில்லை.

இந்த சோதனை குறித்து தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வாட்ஸ்–அப் மூலம் வெளியிட்ட அறிக்கையில், கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அது பற்றிய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.

இன்று காலை வரையில் அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விசாரணை இன்னும் முழுமை அடையாதால், ரூ.5 கோடி பணம் பற்றிய தகவல்கள் எதையும் அதிகாரிகள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

இதனால் ரூ.5 கோடி பண விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இன்று மாலை அல்லது நாளை காலையில் இந்த மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சென்ன கிருஷ்ணன், சேலம் மாவட்டம் எடப்பாடி, செட்டிமாங்குறிச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சிவகுமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது. பணம் எதுவும் சிக்கவில்லை.

Similar News