காட்டுமன்னார்கோவில் தொகுதியில் கோடிக்கணக்கில் செலவு செய்து என்னை வீழ்த்த எதிர்கட்சிகள் திட்டம்: திருமாவளவன்
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று காலை ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் உள்ள ஆனந்தகுடி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
நான் முன்பு அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருந்தேன். தற்போது அந்த கட்சிகளை எதிர்த்து மக்கள் நல கூட்டணி என்ற மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறேன். எங்களது கூட்டணியின் நோக்கம் ஊழலற்ற ஆட்சி அமைப்பது, மதுக்கடைகளை ஒழிப்பது.
நான் சிதம்பரம் எம்.பி. தொகுதியில் 2 முறை போட்டியிட்டேன். 1 முறை வெற்றி பெற்றேன். 2–வது முறையாக வெற்றி வாய்ப்பை இழந்தேன். அந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்தாலும் சிதம்பரம் எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றிருந்தேன்.
இந்த தேர்தலில் நான் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப்போவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் தொகுதி என்னை தாய் போன்று அரவணைக்கும் தொகுதியாகும். அதனால் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.
என்னை எதிர்த்து நிற்பவர்கள் என்னை எப்படியாவது வீழ்த்தி விடவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். பலகோடி செலவு செய்கிறார்கள். என்னிடம் இருப்பது நான் உடுத்தி இருக்கும் உடை மட்டும்தான். நான் உங்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன்.
பணத்துக்காக நீங்கள் வாக்களித்தால் ஓட்டுகள் சிதறும். வெற்றி வாய்ப்பு பாதிக்கும். எனவே நீங்கள் ஓட்டுகளை சிதறாமல் மோதிர சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அப்போது நான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
அ.தி.மு.க. அரசு மதுக்கடையை மூடாது. தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் மதுக்கடைகள் திறந்ததால் இளம் வயதிலேயே பல பெண்கள் கணவனை இழந்து கைக் குழந்தையுடன் தவிக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் கொக்கரசன் பேட்டை, எசலூர், மதகளி மாணிக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தார்.