கர்நாடகா தேர்தல்

சுபாஷ் சந்திர ராதோர்

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நீதிபதி-கைதி

Published On 2023-04-20 14:02 IST   |   Update On 2023-04-20 14:03:00 IST
  • அரசியல் புனிதமானது. ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை.
  • ஷாபி தனது முகவர் மூலம் புத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று நிறைவடைகிறது. பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா சங்கதாலா கிராமத்தை சேர்ந்த சுபாஷ்சந்திரா ராத்தோடு. நீதிபதியான இவர் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா கோர்ட்டில் 4 ஆண்டுகளும், விஜயாப்புராவில் 2 ஆண்டுகளும் பணியாற்றி இருந்தார். கடந்த ஒரு ஆண்டாக கதக்கில் அவர் பணியாற்றினார்.

இந்நிலையில் அரசியலில் ஈடுபட நீதிபதி சுபாஷ் சந்திரா முடிவு செய்தார். இதையடுத்து, தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் அவர் இணைந்தார். அவருக்கு கட்சியில் சித்தாப்புரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதுபற்றி அவர் கூறுகையில், அரசியல் புனிதமானது. ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை. ஜனநாயகத்தின் முக்கிய தூண் சரிந்து கொண்டே வருவதை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

அரசியல் மூலமாக சமூகத்தில் மாற்றங்களையும், பலதரப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும் முடியும். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையில், என்னுடைய நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்றார்.

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் பகுதியை சேர்ந்த பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டார் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி நடந்தது. இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஷாபி என்பவர் உள்பட 8 பேரை என்.ஐ.ஏ. கைது செய்தது. அனைவரும் சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் விசாரணை கைதியாக சிறையில் உள்ள ஷாபி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து நேற்று ஷாபி தனது முகவர் மூலம் புத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். 

Tags:    

Similar News