லைஃப்ஸ்டைல்

பெண்களின் மகத்துவம் போற்றும் மகளிர் தினம்

Published On 2019-03-08 04:03 GMT   |   Update On 2019-03-08 04:03 GMT
தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, வழிகாட்டியாக, நலம் விரும்பியாக பல்வேறு உயிரோட்ட உணர்ச்சிகளின் கலவை பெண்.
வீட்டுக்குள்ளே பூட்டிக்கிடந்த பெண் சமுதாயம், இன்று விண்ணில் பறந்து சாதனை படைக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, வழிகாட்டியாக, நலம் விரும்பியாக பல்வேறு உயிரோட்ட உணர்ச்சிகளின் கலவை பெண். அடுத்தவர்களுக்காகவே அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ பிறந்த அவதாரம் பெண். இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம். ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி அன்று இந்த மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை விடப்படுகிறது.

ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் மகத்துவம் போற்றும் இந்த தினம் எவ்வாறு உருவானது என்பதை காண்போம்.

18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டுவேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். 1857-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன்பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் மாதம் 8-ந் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகிலேயே மகளிருக்கு அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ் சமுதாயம். பெண்களை கடவுளுக்கு மேலாக வைத்து வழிபடுவதும் தமிழ் சமுதாயமே. மனித நாகரிகம் வளர காரணமான மகளிரின் முன்னேற்றம் குறித்த அனைத்து இலக்குகளையும் எட்ட மகளிர் உரிமை வென்றெடுக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இந்த நன்னாளில் மகளிர் தின வாழ்த்துக்களை நாமும் தெரிவித்து கொள்வோம்.
Tags:    

Similar News