பெண்கள் உலகம்

மகளிரை போற்றுவோம்

Published On 2019-03-08 08:55 IST   |   Update On 2019-03-08 08:55:00 IST
உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் பெண்ணுரிமைக்காக போராடிய போராளிகளை பற்றியும், பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் நன்றியுடன் நினைத்து சிறப்பு செய்ய வேண்டும்.
உடலுறுதி கொண்ட ஆணைவிட மனஉறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்து இருப்பவர்கள் தான் பெண்கள். இதனால் தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இத்தகைய பெண்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே சொல்லலாம். ஒரு புறம் பெண் சிசுக்கொலைகள் நடந்து கொண்டு இருக்கும் வேளையில், மறுபுறம் இந்திய பெண்கள் ஏதாவது ஒரு நாட்டில் வெற்றி கனிகளை பறித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பலர் சமுதாயத்தின் தீ நாக்குகளுக்கு பயந்து கொண்டு தங்களுடைய துயரங்களை, அவமானங்களை வெளியில் சொல்லாமல் மறைத்து மனஅமைதியை தொலைத்துவிட்டு வாழ்ந்து வருகிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் சபாநாயகர், பெண் முதல்-அமைச்சர்கள், பெண் விளையாட்டு வீராங்கனைகள் என உலகம் பெருமைப்பட்டு சொல்லி கொண்டாலும், பெண்களின் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பசுமையானதாக இல்லை. ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு ஏற்படுத்திய பொருளாதார சுதந்திரம் பெண்களிடையே தற்போது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்பதற்கு இந்திய நாட்டை உதாரணமாக சொல்வார்கள். பலவித பூக்களால் தொடுக்கப்பட்ட கதம்ப மாலையாக இந்த தேசம் உள்ளது. இந்த தேசத்தில் மகளிரும் பலவிதமான மலர்களே. அவைகள் பூத்து காயாகி, கனியாகி பக்குவமடைகிறது. அந்த கதம்ப மாலையை இணைக்கும் நூலாக தியாகம் உள்ளது. பெண்கள் பலவித முறைகளில் ஆடை, ஆபரணங்கள் அணிந்தாலும் பல மொழிகளில் பேசினாலும் ஆதாரச் சுருதியாக ஒலிக்கும் நாதம் தியாகம் ஒன்று தான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கூறியது அந்தகாலம்.

தோல்விகளை கொண்டு துவண்டு விடாமல் அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிகண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது ஆண்களுக்கு சமமாக பெண்களும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் பெண்ணுரிமைக்காக போராடிய போராளிகளை பற்றியும், பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் நன்றியுடன் நினைத்து சிறப்பு செய்ய வேண்டும். கடந்த கால வரலாற்றில் அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலரும் கற்று ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மகளிர் தினமும், பெண்கள் தங்களது சமுதாய பங்களிப்பை தயக்கமின்றி செய்வதற்கான படிக்கட்டுகளாக அமைய வேண்டும். இந்நாளில் மகளிரை போற்றுவோம். 

Similar News