லைஃப்ஸ்டைல்

பெண்கள் விழிப்புணர்ச்சியே சமூக வளர்ச்சிக்கு வழி

Published On 2019-03-07 08:37 GMT   |   Update On 2019-03-07 08:37 GMT
படித்த பெண்கள் தாம் கற்ற கல்வியை வீணாக்காமல் தம் உள்ளங்களைக் காற்றோட்டமாக வைத்திருந்தால் அவர்கள் நிர்வகிக்கும் வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும் அமைதி நிலவும், முன்னேற்றம் ஏற்படும்.
நாளை (மார்ச் 8-ந்தேதி) உலக மகளிர் தினம்.

படைப்பில் முதலில் ஆண் வந்ததாகவும், பின்னர் பெண் வந்ததாகவும் சில நூல்கள் கூறலாம். ஆனால் அது எனக்குச் சரியாகப்படவில்லை. ஆண்மைக்குப் பொருளாகப் பெண்மையும், பெண்மைக்குப் பொருளாக ஆண்மையும் ஒரே நேரத்தில் தான் பிறந்திருக்க முடியும். ஆணும், பெண்ணும் ஒன்றாகவே தோன்றியிருக்க முடியும். பெண்ணாக இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. சுதந்திரம் என் உரிமை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். சிந்திக்கும் விதமும், செயலாற்றும் நுணுக்கமும் பெண்மையைத் தாண்டிய பொதுமையில் அமைய வேண்டிய அவசியத்தைக் கற்றிருக்கிறேன். இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை உதறிவிட்டேன். எப்படியும் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை அறிவுபூர்வமாக உடைத்தெறிந்தேன்.

இப்போது ஆணுக்கும், பெண்ணுக்குமான வித்தியாசமாக எனக்குத் தெரிவது மிக மிகக் குறைவே. அதில் முக்கியமான ஒன்று அவள் தாயாக இருக்க வேண்டிய கட்டாயம். எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் சொற்களைக் கடன் வாங்கிச் சொல்வதானால் மகளிருக்குத் தாய்மை ஒரு ‘பொன் விலங்கு’. பெண் தாய்மையைப் பேண வேண்டியதன் காரணமாக அவள் வாழ்க்கை முறை ஆண்களில் இருந்து வேறுபடுகிறது. இது இயற்கை நியதி. இந்த நியதியை மையப்படுத்தியே சமூகம் அவளைப் பார்க்கிறது, பாராட்டுகிறது, பத்திரப்படுத்துகிறது. ஆண், பெண் என்ற உடல் ரீதியான வித்தியாசத்தைத் தாண்டி அறிவு செறிந்த மனங்களாக ஒருவரை ஒருவர் அணுகும் பக்குவம் நம்மில் பலரிடையே இன்னும் ஏற்படவில்லை.

ஒரு காலகட்டம் வரை பெண்ணானவள் கணவனைப் பேணிக் குழந்தைகள் பெறுவதற்கும், அவர்களை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கும், குடும்பத்தினரின் நலனைப் பேணுவதற்குமான ஒரு சேவகியாகவே பெரும்பாலும் கருதப்பட்டாள். (நம் சமூகத்தில் இப்போதும் பெரும்பாலும் அப்படித் தான் கருதப்படுகிறாள்.) அந்தவேலையைச் செவ்வனே செய்வதற்கு ஏதுவாகவே அவளுடைய வளர்ப்பு முறை பெரும்பாலும் அமைந்தது. ஆனாலும், நம் அவ்வையாரைப் போல், உபநிடத மாது மைத்ரேயியைப் போல், புராண காலத்து கார்க்கியைப் போல, நான்காம் நூற்றாண்டில் அலெக்ஸாந்த்ரியாவில் வாழ்ந்த அறிஞர் ஹைபாடியாவைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண்கள் சலிப்பான நடைமுறை வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அறிவுப்பாதையில் நடந்தார்கள்.

கல்வி கற்பதில் பெண்களுக்குப் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. குறைந்த வயதில் திருமணமானால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. அப்படியே முயன்று படிக்க சென்றாலும் கற்ற கல்வியை தனக்கும், சமூகத்துக்கும் பயன்படுத்த முடியாதபடி குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் முழு நேரத்தையும் செலவிட வேண்டுமென்ற ஆசை அல்லது நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆண்களுக்குச் சமமாகக் பெண்கள் கல்வி கற்றிருந்தாலும் அதன் பயனைத் துறந்து விடவேண்டிய கட்டாயநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

குடும்பத்தோடு ஐக்கியமாகும் மனப்பாங்குடைய பெண்களுக்கு நல்ல சுற்றத்தாரும் அமைந்துவிட்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் பெண்களுக்கு அறிவு வேட்கை மேலிடும் போது, அவர்களுக்கென்று தனித்துவம் அரும்பும்போது, ஆண்களைப்போல் பெண்களும் தங்களை கட்டுப்படுத்தாத உறவுகள் வேண்டும் என்று விரும்புவார்கள். பெரிய கல்லூரிகளில் படித்துவிட்டு குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களுடைய வாழ்க்கையின் பொருள் எனக்கு விளங்கவில்லை. அவர்களுக்குமே விளங்காது என்றே நினைக்கிறேன். அவர்களுடைய பெற்றோரை பற்றிச் சொல்லவே வேண்டாம்.

ஆக்கபூர்வமாகச் செய்த எதுவுமே வீணாகாதபடி வாழ்க்கையை நடத்துவதில் பெண்கள் தீர்மானமாக இருந்தால், அதற்கு ஆண்களும் உதவியாக நடந்து கொண்டால், குடும்பமும் சமூகமும் நலமாக இருக்கும். வீட்டில் சமைக்கவும், பிற வேலைகளைச் செய்யவும் அவற்றில் தேர்ச்சியடைந்தோரைப் பணிக்கு அமர்த்தலாமே. அப்படியில்லாமல் எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்த மனங்களை முடக்கி வீட்டில் கட்டிப் போடுவது அத்தகைய பெண்களுக்கு மன உளைச்சலைத் தான் தரும்.

‘பொன்சாய்’ செடிகளைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம் மேலிடும்; வீசி வளர்ந்து வானைத் தொட்டு நிழல் தர வேண்டிய மரங்களின் வேர்களைக் குறுக்கியும் பிணைத்தும் செடிகள் போல் தொட்டியில் வளர்க்கிறார்களே என்று! அதே போல் பெண் அறிஞர்கள் ‘பொன்சாய்’ செடிகளாய் வீட்டில் அடைப்பட்டுக்கிடப்பது மானுடத்துக்குப் பெரிய இழப்பில்லையா?

“கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற குறளுக்கேற்ப கற்ற கல்விக்குத் தகுந்தாற்போல் நம் நிலைப்பாடு அமையவேண்டும் அல்லவா? பொறியியலோ, மருத்துவமோ படித்தபின் அந்த அறிவைப் புதைத்துவிட்டு வாழ்க்கை நடத்துவது எந்த விதத்தில் அந்தத் தனி மனிதருக்கும், சமூகத்துக்கும் நியாயமாகும்? 2014-ல் நைஜீரியாவில் சிபொக் நகர நடுநிலைப் பள்ளியிலிருந்து 276 பெண் குழந்தைகள் போகோஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார்கள். பிஞ்சு வயதில் கீழ்த்தரமாக நடத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.

தனி ஒருவனாக இருக்கும்போது ஓரளவு நியாயத்துக்கு கட்டுப்படும் மனிதன் ஒரு கூட்டத்தின் உறுப்பினராகும் போது சீரழிந்து போகிறான். உண்மையின் குரல் சன்னமானது என்பார் என் குருநாதர். கூட்டம் சேரும்போது அந்தக் குரல் அடிபட்டுப் போய் அராஜகம் தலைவிரித்தாடும் போலும்! உலக அளவில் மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோம்; பெண்ணும் ஆணும் சரிநிகர் சமானம் என்று பாடுகிறோம். ஆனால் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்துவோர் உலக அளவில் கூட அதிகம் இல்லையென்றே எண்ணத் தோன்றுகிறது.

நான் சந்திக்கும் பெண்களில் பலர், பெண்ணும் ஆணும் சமம் என்ற உண்மையை உணராதவர்களே. “அவனுக்கென்ன ஆம்பள!”, என்று சொல்வோர், மனத்தின் செயல்பாட்டையும், விஸ்தீரணத்தையும் சரிவரத் தெரிந்துகொள்ளாதவர்களே! உடம்பென்ற கோவிலில் வீற்றிருக்கும் மனமென்ற அறிவுச்சுடர், தூண்டத் தூண்ட முழுதாக வியாபித்து இயற்கையையும், இறையையும் தரிசனம் செய்யக்கூடிய அளவுக்குப் பேராற்றல் கொண்டது. அந்த மனம் ஆணுமில்லை, பெண்ணுமில்லை. ஆணென்றும் பெண்ணென்றும் மனம் குறுகிக் கிடக்கும் வரை விடுதலை என்ற விடிவு தனி உயிருக்கும் இல்லை, மானுடத்துக்கும் இல்லை.

முன்னேற்றத்துக்கு சமமான வழி. இதுவே இந்த ஆண்டு மகளிர் தினக்கொண்டாட்டத்துக்கான மையக் கருத்து. அறிவுத்திறத்தை உணர்ந்த பெண்களும், ஆண்களும் மட்டுமே இப்படியொரு சமமான வழியை வகுக்க முடியும். படித்த பெண்கள் தாம் கற்ற கல்வியை வீணாக்காமல் தம் உள்ளங்களைக் காற்றோட்டமாக வைத்திருந்தால் அவர்கள் நிர்வகிக்கும் வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும் அமைதி நிலவும், முன்னேற்றம் ஏற்படும். பெண் தன் நிலையை உணர்ந்து விழிப்புணர்ச்சியுடன் நடந்தால் சமூக வளர்ச்சி முழுமையடையும்.

ஷோபனா ரவி, தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர்.
Tags:    

Similar News