பெண்கள் மருத்துவம்
பிரசவம்

பிரசவம்... கவனிக்க வேண்டிய முறைகள்...

Published On 2022-05-10 07:20 GMT   |   Update On 2022-05-10 07:20 GMT
குழந்தைப் பேறு என்பது திரைப்படங்களில் காட்டப்படுவது போல் அவ்வளவு வேகமாகவும் சாதாரணமாகவும் நிகழ்ந்து விடுவதில்லை.
* சாதாரணமாக கருவுற்ற பெண்ணுக்கு 280 நாட்களின் முடிவில் குழந்தை பெறுவதற்கான வலி ஏற்படலாம். இது இரு வாரங்கள் முன்னால் பின்னால் நிகழ்வதும் சாதாரணமானது. கருவுற்ற பின் கருப்பை விரிவடையும் போது தாயானவள் ஒரு சிறு அசௌகரியத்தை உணரக் கூடும். மேலும் கருப்பை விரிய விரிய அங்கே காணப்படும் நரம்புகள் முறுக்கப்பட்டு அழுத்தப்படுவதால் வயிற்று நோவு சற்று அதிகமாக நிகழக் கூடும்.

* கர்ப்பகாலம் 35 வாரங்களை அண்மிக்கும் போது (கர்ப்பகாலம், கடைசி முதல் மாதவிடாய்த் தேதியிலிருந்து கணிக்கப்படும்) விட்டு விட்டு ஏற்படும் “பிரக்ஸன் கிரிக்“ எனப்படும் குத்துவலி எழும்பும். இவ்வாறான வலிகள் பல காணப்படும் போது எவ்வாறு உண்மையான பிரசவ வலியை உணர்வது என்று நீங்கள் கேட்கலாம். பிரசவ வலியின் போது கடுமையான கருப்பைச் சுருக்கத்துடன் வேதனை அதிகரித்துச் செல்வதுடன் இரு குத்து வலிகளுக்கிடையிலான நேர இடைவெளி (The Interval between the contraction) குறைந்து செல்லும். உதாரணமாக ஒவ்வொரு அரை மணிக்கு ஒரு தடவை வருகின்ற வலி பின்னர் இருபது நிமிடங்களுக்கு ஒரு தடவையாகவும் பதினைந்து தடவைகளுக்கு ஒரு முறையாகவும் ஏற்பட்டு பிரசவவலியாக மாறும் போது ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்குள்ளும் மூன்று தடவைகள் ‘குத்து’ எழும்பல் நிகழும். சாதாரணமாக பிரசவ வலி எழும்பும் போது பன்னீர் குடம் உடைந்து திரவம் வெளியேறும் போது தாயானவள் உடனடியாக பிரசவ விடுதிக்கு அல்லது பிரசவமனைக்கு அனுப்பப்பட வேண்டும். அங்கே மருத்துவர் பிரசவ நிலையை அளவிட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்வார்.

* பிரசவம் ஆரம்ப நிலையிலிருக்கும் போது எனீமா கொடுப்பதன் மூலம் குடலிலிருந்து மலம் அகற்றப்படும் (இல்லாவிட்டால் குழந்தை பிறக்கும் போது தாயின் மலமும் வெளியேறி குழப்பத்தை ஏற்படுத்தி விடும்) இவ்வாறு சுத்தம் செய்த பின் பன்னீர் குடம் உடைக்கப்படும். இதன் போது வெளியேறும் அம்னியன் பாய்பொருளின் நிறம் அவதானிக்கப்படும். பெரும்பாலும் அம்னியன் பாய்பொருள் நிறமற்றதாக அல்லது மெல்லிய வைக்கோல் நிறமுடையதாக இருக்கும் (உண்மையில் அம்னியன் பாய்பொருள் என்பது மென்சவ்வுகளின் சுரப்புக்களையும் குழந்தை கழித்த சிறுநீரையும் கொண்ட திரவமாகும்) பின்னர் பிரசவத்தை விரைவுபடுத்த சின்ரோசினொன் என்ற ஒக்சிரோசின் ஒமோன் ஊசி மூலம் ஏற்றப்படும். தொடர்ந்து குழந்தையின் இதயத் துடிப்பு அவதானிக்கப்படும். குழந்தையின் இதயத் துடிப்பானது “பினாட்” என்கின்ற உடலொலிபெருக்கி மூலமாகவோ அல்லது இயந்திரத்தின் மூலம் வரைபாகவோ (CTG) பெற்றுக் கொள்ள முடியும்

* ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கு ஒரு முறை மருத்துவர் கருப்பைக் கழுத்து விரிவை (Cervical dilatation) அளவிட்டுக் கொண்டிருப்பார். கருப்பைச் சுருக்கம் குழந்தையின் இதயத்துடிப்பு / தாயின் நாடித்துடிப்பு குருதியமுக்கம் என்பன தொடர்ந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். பிரசவவலி உச்சக் கட்டத்தை அடையும் போது வலியைச் சற்றுக் குறைப்பதற்காக பெத்தடீன் போன்ற வலி நிவாரணிகள் தாய்க்கு ஏற்றப்படும். சாதாரணமாக பிரசவ காலமானது 12-18 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும். இக்காலப் பகுதியில் தாய் உணவு நீராகமின்றி (Fasting) வைக்கப்படுவார். பிரசவத்தில் ஏதும் சிக்கல் நிகழ்ந்து அறுவைச் சிகிச்சை ஏதாவது செய்யவேண்டி ஏற்பட்டால் அதற்கான தயார் நிலையே இந்த Fasting. இதன்போது ஊசி வழியாகத் தாய்க்கு தேவையான நீராகரம் சென்று கொண்டிருக்கும். குழந்தையின் இதயத்துடிப்பு குறையும் பட்சத்தில் (foetal distress) அல்லது குழந்தையின் அம்னியன்பாய் பொருளினுள் மலம் கழிக்கும் பட்சத்தில் அல்லது நீண்ட நேரமாகியும் குழந்தை பெறமுடியாத சந்தர்ப்பத்தில் (Prolong Labour) சிசேரியன் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

* குழந்தை பிறப்பதற்கு அண்மித்த நிலையில் குழந்தையின் தலை வெளியே வர முயற்சிக்கும். இதன் போது வலி உச்ச நிலையை அடையும்.

* குழந்தையின் தலை இலகுவாக வெளியே வருவதற்காகவும் தாயின் யோனியின் வழியில் கிழிவுகள் ஏற்படாதிருக்கவும் எபிசியோட்டமி (Episiotomy) என்ற சிறு வெட்டு ஒன்று வெட்டப்படும். தொடர்ந்து தலை வேகமாக வந்து மோதுவதைத் தடுக்க கையால் அணை கொடுக்கப்படும். தலை வெளியே வந்ததும் அந்த நேரம் குழந்தை பெறப்படும் நேரமாகக் குறிக்கப்படும். தலையை தொடர்நது தோள்களும் பின்னர் முழுக் குழந்தையும் வெளியே இழுக்கப்படும். குழந்தை பிறந்தவுடன் தொப்பிள் நாண் கட்டப்பட்டு சூல்வித்தகத்திலிருந்து குழந்தை பிரிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். குழந்தை பிறந்தவடன் வீரிட்டு அழ வேண்டும். இதுவே குழந்தையின் சுவாச தூண்டல். அவ்வாறு குழந்தை அழாவிட்டால் நாம் அதனை தூண்ட வேண்டி ஏற்படும்.
Tags:    

Similar News