லைஃப்ஸ்டைல்
பிரவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதற்கு இவைகள் தான் காரணம்

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதற்கு இவைகள் தான் காரணம்

Published On 2020-12-17 08:32 GMT   |   Update On 2020-12-17 10:04 GMT
பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிப்பது ஏன்? அதைத் தவிர்க்க முடியாதா? என்ன சிகிச்சைகள் இருக்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
தாய்மை அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தாலும், அதன் பிறகு ஏற்படும் எடை அதிகரிப்பு பெண்களை அதிகம் கவலை கொள்ளச் செய்துவிடுகிறது. பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிப்பது ஏன்? அதைத் தவிர்க்க முடியாதா? என்ன சிகிச்சைகள் இருக்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு உடல் சோர்வு, மனச்சோர்வு, குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்புகளால் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றால் தாயின் உடலில் அதிகரிக்கும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களாலும் உடல் எடை அதிகரிக்கிறது. பாலூட்டுவதால் தாய்மார்கள் இயல்பை விட அதிகளவு உணவு உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனாலும், முழு நேரம் ஓய்வில் இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது. பல சமயம் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும் அதிக அளவு கலோரிகளை தொடர்ந்து உட்கொள்ளுவதாலும் அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும் உடல் எடை அதிகரிப்பு தொடர்கிறது.

இதேபோல் பிரசவத்துக்குப் பிறகு தொப்பை அதிகரிப்பதாக ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், உடல் எடை முழுவதுமே அதிகரிக்கிறது என்பதே உண்மை. இப்போது பரவலாக கர்ப்ப காலத்தின்போது உடற்பயிற்சிகள், யோகா ஆகியவை செய்யப்படுகின்றன. அதேபோல பிரசவத்துக்குப் பிறகும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு சிக்கலும் இல்லாத சுகப்பிரசவமாக இருந்தால், பிரசவத்துக்குப் பின் வரும் நாட்களில் மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது நடைப்பயிற்சி, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை இறுகச் செய்யும் பயிற்சிகள் ஆகியவற்றை செய்யலாம்.

இத்தகைய உடற்பயிற்சிகள் தாய்மார்களின் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசை நார்களை இறுகச் செய்து பின்னாளில் கர்ப்பப்பை இறக்கம், தானாக சிறுநீர் வெளியேறுவது(Urinary Incontinence) போன்றவை ஏற்படாமலும் தவிர்க்கும்.பிரசவத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தாலோ அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ 6 முதல் 8 வாரங்கள் கழித்து உடற்பயிற்சிகளை செய்யலாம். எந்தவொரு உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

தாய்ப்பால் கொடுக்கும் நாட்களில் 2,500 கிலோ கலோரிகள் அளவிலான உணவு உட்கொண்டால் உடல் எடை இழப்பு ஏற்படாமல் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட முடியும். இதுவே தாய்மார்கள் 2,000- 2,300 கிலோ கலோரி உணவுகளை உட்கொண்டு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மிதமான உடற்பயிற்சிகள் செய்யும்போது தாய்ப்பால் சுரப்பதில் தடை இல்லாமல் உடல் எடையும் குறைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு தாங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவுகளை மேலும் குறைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் போது உடலின் எடை வேகமாக குறைகிறது. மேலும் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க ஏரோபிக் பயிற்சிகள் எனப்படும் ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், டான்ஸிங் ஆகியவற்றைச் செய்யலாம்.

பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் எடையானது குறையாமல் இருப்பதாலும், அதிக அளவு உடல் உழைப்பு இல்லாததாலும் பிற்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது, சுவாசக் கோளாறுகள், மூட்டு தேய்மானம், பித்தப்பையில் கற்கள், நெஞ்சுவலி, பக்கவாதம் உள்ளிட்ட பல வகையான உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் உட்கொள்ளும் உணவுகளே 80% நமது உடல் எடையை தீர்மானிக்கின்றன. எனவே, உடல் எடையைக் குறைக்க முற்படும்போது முதலில் என்ன உட்கொள்கிறோம், எவ்வளவு உட்கொள்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள் கொழுப்புச்சத்து குறைந்த மீன் மற்றும் கடல் உணவுகள், கோழிக்கறி, பருப்புகள், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவை எடுத்துக் கொள்ளத் தகுந்தவை. கொழுப்புச்சத்து நிறைந்த பொரித்த உணவுகள், ஜங்க்ஃபுட் எனப்படும் பீட்சா, பர்கர், உப்புச்சத்து நிறைந்த பட்கெட் உணவுகள், இனிப்பு, பிஸ்கெட், மைதா பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

அதிகமான உடல் எடையோ, தொப்பையோ ஒரே நாளில் ஏற்படுவதல்ல. எனவே, அதை மருந்து மாத்திரையால் சில நாட்களில் கரைத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இவ்வகையான மாத்திரைகளை உட்கொள்வோருக்கு அதிக ரத்த அழுத்தம், பசியின்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு, தூக்கமின்மை, படபடப்பு, தலைசுற்றல், ஜீரணக் கோளாறு, இதயக் கோளாறு போன்றவை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். எனவே, எடை, தொப்பையைக் குறைக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

கர்ப்பிணி பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய இயலாது. குறிப்பாக நஞ்சுப்பை (Placenta previa) கர்ப்பப்பையின் வாய் பகுதியில் இருந்தால் உடற்பயிற்சி செய்யும்போது ரத்தப்போக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு (Placenta previa) நடைப்பயிற்சி கூட சாத்தியப்படாமல் இருப்பதால் உடல் எடை அதிகமாகும்.

சிலர் அவர் எடையில் இருந்து கூட 20 கிலோ எடை அதிகமாகக் கூட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களுக்கு உணவு கட்டுப்பாடுமுறை கற்று தரப்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு இவர்களும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இருந்தால் உடல் எடையைக் குறைக்கலாம்!
Tags:    

Similar News