பெண்கள் உலகம்

மாதவிடாய் கால அதிக ரத்தப்போக்கு, உடல் சோர்வுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்...

Published On 2023-02-22 04:07 GMT   |   Update On 2023-02-22 04:07 GMT
  • மாதவிடாய் காலங்களில் ஒரு சிலருக்கும் அதிகளவு ரத்தப்போக்கு இருக்கும்.
  • அடுத்த மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே இடையிலும் ரத்தப்போக்கு வரும்.
பெண்களுக்கு சாதாரணமாக 3 முதல் 7 நாட்கள் இருக்கும் மாதவிடாய் காலங்களில் சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். இது நபருக்கு நபர் வேறுபடும். இந்தக் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு 'பெரும்பாடு' (மெனோரேஜியா-Menorrhagia) என்று அழைக்கப்படுகிறது.

மாதவிடாய் காலங்களில் ஒரு சிலருக்கும் அதிகளவு ரத்தப்போக்கு இருக்கும். மேலும் கை, கால் வலி, உடல் சோர்வாக இருக்கும். ஒரு சிலருக்கு அடுத்த மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே இடையிலும் ரத்தப்போக்கு வரும்.

காரணங்கள்: கருப்பை சளிக்கவசம் கருப்பை உள்ளுறுப்புகளில் வளருதல் (Endometriosis), கருப்பை தசையான மயோமெட்ரியத்தில் எண்டோமெட்ரியம் வளருதல் (Adenomyosis), கருப்பையில் வளரும் சாதாரண தசைக் கட்டிகள் (Fibroid uterus), சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகள் (PCOD), சாக்கலேட் கட்டிகள் (Chocolate cyst), கருப்பை தசை கடினமடைதல் (Adenomyomas), பெண்மைக்குரிய ஹார்மோன்களான புரஜஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் இவைகளின் ஒழுங்கற்ற செயல்பாடுகள், கருத்தடைக்காக வைக்கப்படும் காப்பர்-டி போன்ற உபகரணங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் காலங்களில் அதிகரித்த குருதிப்போக்கு காணப்படுகிறது. இன்னும் கருப்பை புற்றுநோயிலும் ரத்தப்போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. என்ன காரணத்தினால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை தகுதியான மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப மருத்துவம் பார்ப்பது சிறந்தது.

சித்த மருத்துவ தீர்வுகள்:

1) திரிபலா சூரணம் ஒரு கிராம், அன்னபேதி செந்தூரம் 200 மி.கி., படிகார பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து காலை, மாலை இருவேளை தேனில் உட்கொள்ள வேண்டும்.

2) கொம்பரக்கு சூரணம் ஒரு கிராம் எடுத்து, நெய் அல்லது தேனில் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிடவும்,

3) திரிபலா சூரணம் ஒரு கிராம், அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி, சங்கு பற்பம் 200 மி.கி. அளவு எடுத்து தேனில் காலை, மாலை இருவேளை ஏழு நாட்கள் உண்ணவும்.

4) வாழைப்பூ வடகம் ஒன்று அல்லது 2 வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்,

5) பூங்காவி செந்தூரம் 200 மி.கி. காலை இரவு இருவேளை சாப்பிடலாம்,

6) இம்பூறல் மாத்திரை ஒன்று அல்லது 2 காலை, இரவு இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.

7) உணவில் வாழைப்பூ, மாதுளம்பழம், நாவல் பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை சாதம், முருங்கை கீரை, சிவப்பு தண்டுக்கீரை, செவ்வாழைப்பழம் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

மின்னஞ்சல்: doctor@dt.co.in,

வாட்ஸ் அப்: 7824044499

Tags:    

Similar News