பெண்கள் உலகம்

பெண்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளிக்க தன்னம்பிக்கை அவசியம்...

Published On 2023-04-30 07:17 GMT   |   Update On 2023-04-30 07:17 GMT
  • உணர்ச்சி வசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது.
  • உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும், தேர்ந்தெடுக்கும் வேலையை திறமையாக செய்து முடிக்கவும் மனம் தெளிந்த நிலையில் இருக்க வேண்டும்.

ஏதேனும் மன குழப்பங்களுக்கு ஆளானால் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க முடியாது. எளிதில் உணர்ச்சி வசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கோபம், சோகம், வேதனை, மன அழுத்தம் போன்றவை உணர்வுகளை தடுமாற வைக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளித்து உணர்வுகளை நிர்வகிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அது உணர்ச்சிகளை கையாள்வதற்கு உதவிகரமாக அமையும்.

சந்தோஷமாக இருந்தாலோ, மனக்கவலை அடைந்தாலோ உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருபோதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதீர்கள். ஏனெனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

ஏதாவதொரு சூழலில் மன நெருக்கடிக்கு ஆளானால் சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம். எந்த வேலையிலும் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருக்கலாம். அந்த சமயங்களில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. மனதை வேறு செயல்களில் ஈடுபடுத்தலாம். அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மன அழுத்தம்தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. ஒருவேளை மன அழுத்தத்திற்கு ஆளானால் அதில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயிற்சிகளில் ஈடுபடலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம், உடற் பயிற்சி போன்ற உடலை தளர்வடைய செய்யும் பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். விளையாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள்தான் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்றில்லை.

அவர்களுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். மனதிற்கு பிடித்தமான எந்தவொரு விளையாட்டையும் தயங்காமல் மேற்கொள்ளலாம். நடனமும் ஆடலாம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உண்பது, போதுமான நேரம் தூங்குவது போன்றவை மன நலனை பாதுகாக்கவும், உணர்வுகளை சம நிலையில் பராமரிக்கவும் உதவும். மன நெருக்கடியில் இருக்கும் சமயங்களில் நெருக்கமானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் குழு விவாதங்களிலும் ஈடுபடலாம். வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொள்வதும் அவசியமானது. தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணி புரியலாம். தன்னார்வலர்களாக மாறி அவ்வாறு சமூக சேவைகள் புரிவது மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும். அர்த்தமுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுகிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும். உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களுடன் சிரித்து பேசி மகிழ்வதும் உணர்ச்சி ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.

Tags:    

Similar News