பெண்கள் உலகம்

ஆன்லைன் ஆபத்து... எச்சரிக்கை தகவல்கள்...

Published On 2022-09-05 04:50 GMT   |   Update On 2022-09-05 04:50 GMT
  • உங்களது அந்தரங்க தருணங்களை ஹேக்கர்கள் படம்பிடித்து உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.
  • ‘பாஸ்வேர்ட்', ‘ ‘கியூ.ஆர்' கோடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பெண்கள், இளைஞர்கள் போன்றோர் அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் அளவுக்கு அதிகமாக நேரம் செலவிடுவதால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள் குறித்து தொடக்கத்திலேயே விளக்கியிருந்தேன். நமது மாணவச் செல்வங்கள் 'ஆன்லைன்' விளையாட்டுக்களில் மூழ்கினால், அது மனச்சிதைவு நோயாக மாறிவிடும் ஆபத்து குறித்து கவலையோடு பகிர்ந்திருந்தேன். புதிது, புதிதாக முளைக்கும் கொரோனா வைரஸ் 'வேரியண்ட்'டுகளைப் போன்று, 'சைபர்' கிரிமினல்கள் புதுப்புது தொழில்நுட்ப அவதாரம் எடுப்பதால், 'சைபர்' மோசடிகள் குறித்து அனைவரும் எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும் என்று எச்சரித்திருந்தேன்.

புகைப்படங்களை 'மார்பிங்' செய்வதற்கான செயலிகள் எளிதாக கிடைப்பதால், முன்னாள் நண்பர்கள் கூட 'மார்பிங்' 'பிளாக்மெயிலர்'களாக மாறி சில பெண்களை வதைப்பது, வளைப்பது பற்றி விளக்கியிருந்தேன். உங்களது செல்போன் அல்லது கணினி கேமராக்களையே பயன்படுத்தி, உங்களது அந்தரங்க தருணங்களை 'ஹேக்கர்'கள் படம்பிடித்து உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்பது குறித்து எச்சரித்திருந்தேன். டி.ஜி.பி.க்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் பல பிரபலங்களின் பெயர்களில், அவர்களது புகைப்படங்களுடன் போலி அக்கவுண்டுகளை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் பற்றி எச்சரித்திருந்தேன். ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி செயல்படும் பல 'டுபாக்கூர்' கடன் செயலிகள், பயனர்களை 'பிளாக்மெயிலிங்' செய்து அநியாய வட்டி வசூலிப்பது பற்றி விரிவான தகவல்களுடன் பதிவிட்டிருந்தேன்.

ஆரம்பக் கட்டத்தில் உங்களுக்கு சிறு வெற்றிகள் தந்து ஆசைகாட்டும் 'ஆன்லைன்' சூதாட்டங்களில் உங்களுடன் ஆடுவது தனிநபர் அல்ல, ஆயிரம் பேரின் மூளை வலிமைகொண்ட 'கம்ப்யூட்டர் புரோகிராம்' என்பதால், இறுதியில் தோற்பதும் ஓட்டாண்டி ஆகப்போவதும் நீங்கள்தான்- ஏமாறாதீர்கள் என்று விளக்கி இருந்தேன். 'பிட்காயின்' போன்ற 'கிரிப்டோ கரன்சிகளை' எலான் மஸ்க் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் ஆதரித்தாலும்கூட, எந்த ஒரு அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்தமுடியாத 'கிரிப்டோ கரன்சி'களில் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் ஏமாறவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். அழகிய பெண்களின் புகைப்படங்களுடன் சில 'ஆன்லைன்' திருமண தகவல் மையங்கள் விதவிதமாக மோசடி செய்வது குறித்த பல தகவல்களுடன் அம்பலப்படுத்தி இருந்தேன். பிரபல வங்கிகளின் தலைமையகத்திலிருந்து பேசுவதுபோல் பேசி, உங்களது வங்கி விவரங்களை கேட்டுவாங்கி கொள்ளையடிக்கும் 'சைபர்' கிரிமினல்களைப் பற்றி பல சம்பவங்களுடன் விளக்கி இருந்தேன்.

நல்ல சம்பளத்துடன் வேலைவாங்கித் தருவதாக ஆசைகாட்டி, 'அட்வான்ஸ்' தொகை கட்டச்சொல்லி பணம்பறிக்கும் 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருந்தேன். உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, நமது கம்ப்யூட்டர்களின் குறைபாடுகளை சரிசெய்வதற்கான தொலைநிலை அணுகல் செயலிகளை தவறாகப் பயன்படுத்தி, நமது கம்ப்யூட்டரில் உள்ள வங்கி கணக்கு உள்ளிட்ட ரகசிய தகவல்களை திருடும் 'சைபர்' கிரிமினல்கள் பற்றி எச்சரித்திருந்தேன்.

'வாட்ஸ் அப்' போன்ற தளங்கள் மூலமாக, முன்பின் தெரியாத யாராவது ஒருவர் ' கியூ.ஆர்' குறியீடுகளை அனுப்பி அதனை 'ஸ்கேன்' செய்யுமாறு கேட்டால் திட்டவட்டமாக மறுத்துவிடுங்கள் என்று தெரிவித்திருந்தேன். 'டேட்டிங்' செயலிகள் வெளியிடும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப்பார்த்து இளைஞர்கள் ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், இந்த 'டேட்டிங்' செயலிகளை பின்தொடர்ந்துவரும் 'பிளாக்மெயில்' கும்பல்களிடம் உங்கள் பணத்தையும் மானம், மரியாதையையும் இழக்காதீர்கள் என்று எச்சரித்திருந்தேன்.

ஆபாசப் படங்களை 'ஆன்லைனில்' பார்த்ததால், உங்களது 'பிரவுசர்' முடக்கப்பட்டுள்ளதாக பயனரை எச்சரிக்கும் போலியான 'பாப்-அப்' விளம்பரங்கள் மூலமாக நடைபெறும் 'பிளாக்மெயில்' மோசடிபற்றி விளக்கமாக குறிப்பிட்டிருந்தேன். 'ஜிபே', 'பேடிஎம்' போன்ற 'யூபிஐ' 'பேமெண்ட்' செயலிகளை பயன்படுத்தி 'சைபர்' கிரிமினல்கள் பணம் பறிப்பது பற்றி சம்பவங்களுடன் விளக்கியிருந்தேன். 'பேமெண்ட்' செயலிகளின் 'பாஸ்வேர்ட்', ' 'கியூ.ஆர்' கோடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்திருந்தேன். 'சைபர்' கிரிமினல்களிடம் சிக்கிக்கொண்ட ஏராளமானவர்களின் வழக்குகளை காவல்துறைப் பணியின்போது கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில், இனியாவது மக்கள் ஏமாறாமல் இருக்கவேண்டும் என்ற அக்கறையுடன்தான் இந்த தொடரை எழுத முன்வந்தேன். இந்த தொடர், மிகச்சிறந்த எச்சரிக்கை உணர்வை விதைத்திருப்பதாக பாராட்டிய வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி

Tags:    

Similar News