பெண்கள் உலகம்

உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

Published On 2023-10-30 08:32 GMT   |   Update On 2023-10-30 08:32 GMT
  • பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.
  • பெண்கள் தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை.

குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்பு பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இவற்றை தடுக்க பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

மனநலம்:

உளவியல் ரீதியாக ஆண்களை விட பெண்கள், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனச்சோர்வு, பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. கர்ப்ப காலத்திலும், அதற்கு பிறகும் இந்த விஷயத்தில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பலரும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்.

அடிக்கடி மனச்சோர்வு, பதற்றம் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் நாளடைவில் குடும்ப வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே 2 வாரங்களுக்கு மேல் மனச்சோர்வு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை உணர்ந்தால், அதை புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

இதய நோய்கள்:

சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சிறு சிறு அறிகுறிகளை கவனிக்காமல் பெண்கள் அலட்சியம் காட்டுவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். மாரடைப்பு ஏற்படும்போது ஆண்களைப்போல இல்லாமல், பெண்களுக்கு வேறுவிதமான அறிகுறிகள் தென்படும்.

நெஞ்சுவலி. மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, முதுகு, கழுத்து அல்லது தாடை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமானது.

தூக்கமின்மை:

உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது தூக்கமின்மை. இதயநோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு இரவில் 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. தியானம், யோகா, மிதமான உடற்பயிற்சிகள் செய்வது. வெந்நீரில் குளிப்பது, நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவை தூக்கத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளாகும்.

மருத்துவ பரிசோதனைகள்:

பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். வயதை பொறுத்தும் சில பரிசோதனைகளை பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை கண்டறிவதற்கான பேப் ஸ்மியர் சோதனைகள், மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் மேமோகிராம் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைகள், எலும்பு தேய்மானத்தை கண்டறிய உதவும் பரிசோதனைகள், கால்சியம் குறைபாடு, பாலியல் சார்ந்த தொற்றுகளை கண்டறிய உதவும் எஸ்.டி.டி. ஸ்கிரீனிங், குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளை கண்டறிய உதவும் கொலோனோஸ் கோபி போன்ற பரிசோதனைகளை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது.

Tags:    

Similar News