பெண்கள் உலகம்

நேர்காணலில் வெற்றி பெற கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

Published On 2025-10-18 08:08 IST   |   Update On 2025-10-18 08:08:00 IST
  • ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது உடல்மொழி முக்கியம்.
  • பதற்றப்படாமல் சரியான பதில்களை தெளிவாக சொல்லுங்கள்.

இன்றைய போட்டி உலகில் பொருத்தமான வேலையை தேடி அதற்கான நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவது பலருக்கும் கடினமாகிவிட்டது. பலரும் பொதுவான சில தவறுகளை செய்து வேலையை தவறவிட்டு விடுகிறார்கள். நேர்காணலில் வெற்றி பெற கவனத்தில் கொள்ளவேண்டிய 5 விஷயங்களை இந்த தொகுப்பில் காணலாம்..

1. ஆராய்ச்சி செய்யுங்கள்

ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது முதலில் நிறுவனம், பணி கலாசாரம், அவர்களின் தயாரிப்புகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம். நிறுவனத்தின் வலைத்தளம், சமூக ஊடக பக்கங்கள் போன்றவற்றில் நிறுவனம் பற்றிய சமீபத்திய செய்திகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நிறுவனத்தில் ஏதேனும் பெரிய திட்டங்கள் அல்லது தலைமை மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை அறிந்து வையுங்கள்.

2. நேரம் மற்றும் தோற்றம்

நேர்காணலுக்கு தாமதமாக செல்வது, சரியான முறையில் உடை அணியாமல் இருப்பது உங்கள் மேல் உள்ள நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கிவிடும். ஆகவே உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு குறித்த நேரத்தை விட 15 நிமிடங்களுக்கு முன்பாகவே செல்லுங்கள். நேர்காணலுக்கு சரியான முறையில் ஆடையை தேர்ந்தெடுத்து அணியுங்கள். பாலிஷ் செய்யப்பட்ட காலணிகள், குறைந்த அளவிலான ஆபரணங்கள் நிறைவான தோற்றத்தை அளிக்கின்றன.

3. உடல் மொழி

ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது உடல்மொழி முக்கியம். கண்களை நோக்கி பேசுவதை தவிர்ப்பது, குனிந்து நிற்பது ஆகியவை உங்களுக்கு போதுமான தன்னம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகின்றன. நேராக அமர்ந்து, கண்களை நோக்கி பேசுங்கள். அதேபோல பதிலளிக்கும்போது நம்பிக்கையுடன் தைரியமாக பேசுங்கள்.

4. தடுமாற்றம் வேண்டாம்

கவனமில்லாமல் பதில் சொல்வது, பேசும்போது தடுமாறுவது ஆகியவை அந்த தலைப்புகளை பற்றி அதிகம் தெரியாது என்பதையும், தன்னம்பிக்கை இல்லை என்பதையும் காட்டும். பதற்றப்படாமல் சரியான பதில்களை தெளிவாக சொல்லுங்கள்.

5. கேள்வி கேளுங்கள்

பெரும்பாலான நேர்காணல்களில் இறுதியில், `உங்களுக்கு ஏதேனும் கேள்வி உள்ளதா?' என கேட்கப்படும். நீங்கள் எதையும் கேட்காமல் மவுனமாக இருந்தால் வேலையில் ஆர்வம் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே கேள்விகளை முன்கூட்டியே தயார் செய்து கேள்வி கேளுங்கள். பணி கலாசாரம், பணியில் உள்ள முக்கிய சவால்கள் போன்றவற்றை பற்றி கேளுங்கள். இது புதிய வேலையில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை காட்டுகிறது.

Tags:    

Similar News