இயற்கை அழகு

பெண்கள் விரும்பும் விதவிதமான 'லட்கான்'... வீட்டிலேயே செய்யலாம் வாங்க....

Update: 2022-11-17 08:33 GMT
  • 'லட்கான்', பல்வேறு ரகங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கிறது.
  • இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும்.

லெகெங்கா, சுடிதார், குர்த்தி, பிளவுஸ், பாவாடை என அனைத்து விதமான ஆடைகளிலும் லட்கானைத் தொங்க விட்டு அலங்கரிக்கிறார்கள். பெண்கள் ஜடையில் சூடிக்கொள்ளும் 'குஞ்சம்' போன்ற அமைப்பில் இருக்கும் 'லட்கான்', பல்வேறு ரகங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கிறது. இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே…

தேவையான பொருட்கள்: துணி, ஊசி, நூல், சில்க் கயிறு, அளவுகோல், கத்தரிக்கோல்.

செய்முறை: துணியில் 2x2 அங்குல நீள அகலத்தில் இரண்டு துண்டுகள் வெட்டிக்கொள்ளவும். அதனைப் பாதியாக மடித்து இரண்டு எதிரெதிர் முனைகளை ஒன்றாகத் தைக்கவும். அதில் ஒரு முனை மட்டும் திறந்து இருக்கும்படி செய்யவும். இப்போது சில்க் கயிற்றின் முனையில் முடிச்சு போடவும். தைத்து வைத்திருக்கும் துணிக்கு உள்ளே கயிற்றை நுழைத்து பின்பு வெளியே எடுத்து துணியைத் திருப்பவும். பிறகு திறந்திருக்கும் மற்றொரு முனையையும் ஊசி நூல் கொண்டு தைக்கவும். இதேபோல் மற்றொரு சில்க் கயிற்றிலும் செய்யவும்.

அடுத்ததாக, துணியில் 4x4 அங்குல நீள அகலத்தில் 16 துண்டுகள் வெட்டிக்கொள்ளவும். சதுர வடிவ துணியின் ஒரு முனையை அதன் எதிர் முனையுடன் வைத்து மடித்தால் முக்கோண வடிவம் கிடைக்கும். அதைப் பக்கவாட்டில் மடித்தால், சிறிய அளவிலான முக்கோண வடிவ துணி கிடைக்கும். இப்போது முக்கோணத்தின் அடிப்பகுதியில் உள்ள துணிகளை ஒன்றாக வைத்து தைக்கவும். இதேபோல் 16 துண்டு துணிகளையும் தைக்க வேண்டும். பின்னர், முக்கோண துணிகளை உள்ளிருந்து வெளியே திருப்பிக்கொள்ளவும். சில்க் கயிற்றில் ஏற்கனவே தைத்த சதுர வடிவ துணிக்கு கீழே எதிர் எதிர் முனையில் முக்கோண துணி துண்டுகளை வைத்து தைக்கவும். ஒரு கயிற்றில் எட்டு முக்கோண துணிகளைத் தைக்கலாம். மற்றொரு கயிற்றில் எட்டு முக்கோண துணிகளை எதிர் எதிர் திசையில் ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து தைத்தால் அழகான 'லட்கான்' தயார்.

குறிப்பு: லட்கானில் உங்களின் கற்பனைக்கு ஏற்ப மணிகள், கற்கள், கண்ணாடிகள், பாசிகள், நூல் துண்டுகள் போன்றவற்றைச் சேர்த்து அலங்கரிக்கலாம்.

Tags:    

Similar News