கிச்சன் கில்லாடிகள்
ஆந்திரா சிக்கன் வறுவல்

அசத்தலான ருசியுடன் ஆந்திரா சிக்கன் வறுவல்

Published On 2022-05-28 08:12 GMT   |   Update On 2022-05-28 08:12 GMT
ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் காரத்திற்கும், ருசிக்கும் பெயர் பெற்றவை. அசத்தலான ருசியுடன் கூடிய ஆந்திர ஸ்டைல் சிக்கன் வறுவல் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.
மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள்:

தனியா - 1½ தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
பட்டை - சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - 6
காஷ்மீரி மிளகாய் - 4

செய்முறை:

வாணலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை போட்டு, எண்ணெய் ஊற்றாமல் இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

வறுவலுக்குத் தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கோழிக்கறியை மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

பின்பு பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி அதில் சேர்த்துக் கிளறவும்.

அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் கறிவேப்பிலை சேர்க்கவும்.

சிறிது நேரம் கழித்து அந்தக் கலவையில் ஊற வைத்த கோழிக்கறியை சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கலக்கவும். கலவையில் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை,

கோழிக்கறியில் ஏற்கனவே உப்பு போட்டு ஊற வைத்திருப்பதால், சுவைத்துப் பார்த்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் பக்குவத்தில் சிறிது கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

ருசியான ஆந்திரா சிக்கன் வறுவல் தயார்.
Tags:    

Similar News