பொது மருத்துவம்

மவுனம் கற்றுத்தரும் வாழ்வியல் பாடங்கள்...

Published On 2025-07-17 12:51 IST   |   Update On 2025-07-17 12:51:00 IST
  • மவுனமாக இருக்கும் சுபாவத்தை வளர்த்துக்கொள்வது அதிகம் பேசுவதை தவிர்க்க உதவிடும்.
  • எல்லோரிடமும், எல்லா நேரங்களிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டியதில்லை.

இன்றைய காலகட்டத்தில் அமைதியாக, மவுனமாக இருப்பவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் குரல் கொடுப்பவராக, சமூகவலைத்தள பக்கங்களில் கருத்து பதிவிடுபவராக, அசாத்திய துணிச்சலுடன் செயல்படுவராக இருப்பவர்களுக்குத்தான் சமூகத்தில் மதிப்பு உண்டு என்ற எண்ணமும் சிலரிடத்தில் இருக்கிறது. ஆனால் மவுனத்தை விட சிறந்த ஆயுதம் வேறு எதுவும் இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த பதிவில் மவுனம் என்னென்ன வாழ்வியல் பாடங்களையெல்லாம் கற்றுத்தரும் என்று பார்ப்போமா?

* கவனிக்கும் திறனை வளர்த்தெடுக்கும்

உங்களிடம் மற்றவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தை சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு பேசாமல், அவர்களின் பேச்சில் வெளிப்படும் உணர்வுகளை கவனிக்க வேண்டும். உடல்மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களின் பேச்சு ஆழ்மனதை அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். கவனிக்கும் திறனையும் வளர்த்தெடுக்கும். ஏனெனில் மற்றவர்கள் செய்யும் தவறுகளை, மவுனமாக, அமைதியாக இருப்பவர்கள்தான் அதிகம் கவனிக்கிறார்கள்.

* தெளிவை தரும்

ஏதேனும் ஒரு செயலில் அவசர அவசரமாக ஈடுபடும்போது நம்முடைய கவனமெல்லாம் எப்படியாவது அதனை சிறப்பாக செய்து முடித்துவிட வேண்டும் என்பதில்தான் இருக்கும். திடீரென குறுக்கீடு எழுந்தால், மற்றவர்கள் உங்கள் செயல்பாட்டை விமர்சனம் செய்தால் உடனே கோபம் கொந்தளிக்கும்.

அது அந்த செயலில் இருந்து கவனத்தை திசை திருப்பிவிடக்கூடும். அந்த சமயத்தில் மவுனமாக அவர்களின் கருத்தை ஆமோதித்துவிட்டு, அதன் பிறகு அதிலிருக்கும் நிறை, குறைகளை நிதானமாக அலசி ஆராய்ந்து செயல்படுவதுதான் சிறப்பானது. அந்த மனத்தெளிவை மவுனம் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும். மீண்டும் சரியான பாதையில் எண்ணங்களை கட்டமைக்க வழிவகை செய்யும்.

* அர்த்தமுள்ள வார்த்தைகளை பேச வைக்கும்

மவுனமாக இருக்கும் சுபாவத்தை வளர்த்துக்கொள்வது அதிகம் பேசுவதை தவிர்க்க உதவிடும். அர்த்தமுள்ள சொற்களை பேசுவதற்கும் ஊக்குவிக்கும். அந்த சொற்களில் பயனுள்ள தகவல்கள் இடம் பெற்றிருக்கும். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதற்கும், அர்த்தமுள்ள சொற்களை பேசுவதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை மவுனம் கற்றுக்கொடுக்கும். குறைவாக பேசினாலும் அற்புதமாக பேசினார் என்ற பாராட்டையும் பெற்றுக்கொடுக்கும்.

* உடல் சக்தியை பாதுகாக்கும்

தேவையற்ற கருத்துகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள். அந்த இடத்தில் மவுனம்தான் சிறந்தது. அது நேரமும், உடல் சக்தியும் வீணாகுவதை தடுக்கும். ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற தேவையில்லை.

அதிலும் எதிர்மறை கருத்துகளை தெரிவிப்பவர்களிடம் தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சை தொடர வேண்டும். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்பட்சத்தில், அடுத்த முறை தேவையற்ற பேச்சுகளை பேசுவதற்கு முன்வர மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசினாலும் நீங்கள் அதனை மவுனமாக கடந்து சென்று விடுவீர்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.



* ரகசியம் காக்கச் செய்யும்

எல்லோரிடமும், எல்லா நேரங்களிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டியதில்லை. மவுனம் உங்கள் வாழ்க்கையை இன்னும் ரகசியம் நிறைந்ததாக மாற்றும். அந்த ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக மற்றவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

* கேட்கும் திறனை அதிகரிக்கும்

நீங்கள் ஒரு பேச்சாளராக இருப்பதை விட கேட்பாளராக இருப்பது எளிதானது. மற்றவர்களின் பேச்சை ரசித்து கேட்க தொடங்கும்போது இயல்பாகவே உங்கள் மனம் அமைதியாகும். நீங்கள் அதிகமாக கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு உங்கள் சந்தேகங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கும்போது அவர்களும் ஆர்வமாக பதிலளிப்பார்கள். மீண்டும் கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், நட்பு வட்டத்தை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

* உணர்ச்சி ரீதியாக புத்திசாலியாக்கும்

மவுனம் உங்களை உணர்ச்சி ரீதியாகவும் புத்திசாலியாகவும் மாற்றும். தன்னுடைய மனக் குமுறலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பேசுபவர், தன் பேச்சை கேட்பவரிடம் ஆலோசனையையோ, அனுதாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை. ஆழ்மனதில் பதிந்திருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை தான் எதிர்பார்க்கிறார். அவரது மனக் குமுறலை எந்த குறுக்கீடும் செய்யாமல் மவுனமாக கேட்பதையே அவர் விரும்பவும் செய்வார். உங்கள் மவுனம் அவரை ஆசுவாசப்படுத்தும். உங்களையும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய நல்ல மனிதராக அடையாளம் காட்டும்.

Tags:    

Similar News