வாட்டர் டயட்டை பின்பற்றுவதற்கான வழிமுறைகள்
- ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பதாக உறுதி செய்து கொள்ளுங்கள்.
- சாப்பிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, தண்ணீர் குடித்தால் பசியின்மையைத் தவிர்க்க முடியும்.
உடல் ஆரோக்கியம், டயட் போன்றவற்றில் புதுப்புது விஷயங்கள் 'டிரெண்ட்' ஆன வண்ணம் இருக்கின்றன. அப்படி, இப்போது டயட் பிரியர்களின் புதிய டிரெண்ட் ஆக மாறியிருப்பது, 'வாட்டர் டயட்'.
உணவுகளைவிட, அதிகளவு தண்ணீர் பருகுவதுதான், வாட்டர் டயட்டின் அடிப்படை. இதை முறையாக கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க முடியும் என்கிறார்கள். சரி, வாட்டர் டயட்டை பின்பற்றுவதற்கான சில வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்...
* அதிகமாக நீர் பருகுங்கள்
நம் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நீர் மிகவும் இன்றியமையாதது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையில் தண்ணீர் குடிப்பதையே மறந்து விடுகிறோம். ஏன், ஒரு பாட்டில் தண்ணீரை அடைத்து குடிக்கக்கூட நம் எல்லோருக்கும் சோம்பேறித்தனம் தொற்றிக் கொள்கிறது. உங்கள் உடல் உறுப்புகள் எல்லாம் சீராக இயங்க தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று.
ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பதாக உறுதி செய்து கொள்ளுங்கள். இதுதான், வாட்டர் டயட்டின் அடிப்படை.
* அடிக்கடி பருகுங்கள்
அதிகாலை எழுந்ததும் 2-3 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு அல்லது லவங்கப்பட்டை பொடி சேர்த்து கொண்டால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். அதே மாதிரி நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் முழுவதும் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்லுங்கள். முடிந்தால் வாட்டர் ஆப் போன்றவற்றை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்து அடிக்கடி அலாரம் வைத்து ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அலுவலக வேலையில் இருக்கும் போது கூட 1-2 மணி நேரத்துக்கு ஒரு முறை வாட்டர் கூலர் இருக்கும் இடம் வரை நடந்து செல்லுங்கள். இது நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தும்.
* தாகம்
தாகம் எடுக்கும்போது சோம்பேறித்தனம் பார்க்காமல் தண்ணீர் பருகுங்கள். தாகத்தையும், பசியையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். பலரும் தாகத்தை தவறாக புரிந்து கொண்டு நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு எடையை கூட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு செய்யாமல் தாகம் எடுக்கும் போது தண்ணீர் மட்டும் அருந்துங்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் அதில் முதன்மையானது தண்ணீர் பருதுவதுதான்.
* பசியின்மை
சாப்பிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, தண்ணீர் குடித்தால் பசியின்மையைத் தவிர்க்க முடியும். சாப்பிட்டதும் உணவு சாப்பிட்ட திருப்தி உண்டாகும். இது தேவையற்ற உணவுகளையும், கலோரிகளையும் எடுத்துக் கொள்ளாமல் இருக்க உதவும். குறிப்பாக காலை உணவுக்கு முன்பாக தண்ணீர் குடித்தால் கிட்டத்தட்ட நீங்கள் சாப்பிடும் உணவின் அளவில் இருந்து 13 கலோரிகள் குறைவதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
* தண்ணீர் அளவு
குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் (2 லிட்டருக்கு) மேல் குடிக்க வேண்டியது கட்டாயம். ஆனால் பொதுவாக நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் உடலுக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு சிலருக்கு மிக அதிகமாக வியர்வை உண்டாகும். அவர்கள் வெறுமனே 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதாது. நிச்சயம் அதிகமாகக் குடிக்க வேண்டும்.