பொது மருத்துவம்
வாழ்க்கையை ரசிக்க வைகறையில் துயில் எழுவோம்..

வாழ்க்கையை ரசிக்க வைகறையில் துயில் எழுவோம்..

Update: 2022-04-14 00:30 GMT
நோய் நம்மை அணுகாமல் இருக்க, நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தேரையர் என்ற சித்தர் நோய்அணுகாவிதி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மனித சமுதாயம் பல விதமான நோய் தாக்குதல் களுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறது. சுகாதார சீர்கேடு, உணவு பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாறுபாடு, மாசுகலந்த குடிநீர் போன்றவை நோய்களுக்கு ஒருவிதத்தில் காரணம். வேலைச் சுமை, குடும்பம் மற்றும் பணி இடங்களில் ஏற்படும் மன அழுத்தங்களும் நோய்களை உருவாக்குகின்றன. சரியான வாழ்வியல் முறைகளையும், நோயில்லா நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க தவறுவதும் நோய்களுக்கு காரணம். சுற்றுச்சூழல், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள், மரபணு, உணவு இவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது, இவைகளில் ஏற்படும் தவறுகள்கூட நோய்களை உருவாக்கும். நோயின்றி வாழ்வதற்கு நாம் சரியான வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்தாகவேண்டும்.

நாம் வீட்டு உபயோகத்திற்கான உபகரணம் ஒன்றை வாங்க கடைக்கு செல்கிறோம். பலவற்றையும் பார்த்து அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து வாங்குகிறோம். அந்த பொருளோடு சேர்த்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நமக்கு ஒரு கையேடும் தருவார்கள். சாதாரண பொருளுக்கே பயன்பாட்டு கையேடு இருக்கும்போது, அற்புதமான நமது உடலை எப்படி பயன் படுத்தவேண்டும் என்பதற்காக நமக்கு கையேடு ஏதேனும் உள்ளதா?

உள்ளது! சித்தர்கள் அதற்காக நாள் ஒழுக்கம் மற்றும் கால ஒழுக்கம் என்ற கையேட்டினை வகுத்து தந்திருக்கிறார்கள். நோய் அணுகாவிதி, நோயில்லா நெறி முறைகளை சித்த மருத்துவத்தில் தின ஒழுக்கம், கால ஒழுக்கம் என வகுத்து அளித்திருக்கிறார்கள். அதை சரியான முறையில் பின்பற்றினால் நோயில்லா வாழ்வு வாழலாம்.

தின ஒழுக்கம் என்பது நாம் காலையில் எந்த நேரத்தில் துயில் எழ வேண்டும் என்பதில் தொடங்குகிறது. பல்துலக்கும் முறை, குளியல், உடற்பயிற்சி, உணவு, ஓய்வு என நாம் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்தையும் அது சொல்கிறது. பற்களை உறுதிப் படுத்தும் மூலிகைகளால் பல்துலக்குவது, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, அதனால் ஏற்படும் நன்மைகள், குளிக்கும்போது பயன்படுத்தும் மூலிகை பொடிகள், நாம் உடுத்தும் ஆடைகள், பருகும் பானங்கள், உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் ஏற்ற பாத்திரங்கள் என அத்தனை விஷயங்களும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

கால ஒழுக்கம் என்பது மாறி வரும் பருவகாலங் களுக்கு ஏற்ப நம் உடலை பாதுகாப்பது பற்றி கூறுகிறது. பருவங்கள் மாறும்போது தொற்றுநோய் ஏற்படும். அதை தடுக்கும் வழிமுறைகள், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உணவு, உடை, சுற்றுப்புற தூய்மை, நீர் நிலைகளை பாதுகாக்கும் முறை போன்றவை எல்லாம் அதில் தரப்பட்டிருக்கிறது. உடல் சார்ந்த ஒழுக்கங்களே ஆரோக்கியத்தின் அடிப்படை.

நோய் நம்மை அணுகாமல் இருக்க, நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தேரையர் என்ற சித்தர் நோய்அணுகாவிதி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் இன்றும் பொருந்தக்கூடியதாக உள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பாதுகாப்பான குடிநீர், ஊட்டசத்து மிக்க உணவு, பாதுகாப்பான உடலுறவு, தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் புகையிலை- மது பழக்கங்களை தவிர்த்தல் போன்றவை அவசியம் என்பதை நாம் அறிந்திருந்தும், அவைகளை பின்பற்றாமல் அலட்சியம் செய்கிறோம். ஆரோக்கிய வாழ்க்கையில் மனதிற்கும் மிக முக்கிய பங்குள்ளது. நற்சிந்தனை, நற்செயல்கள், தியானம், மூச்சுபயிற்சி யோகாசனங்கள் போன்றவை உடல் மற்றும் உள்ளம் சார்ந்த பயிற்சிகளாகும். இவை தனி மனித ஒழுக்கம் தொடர்புடையதாக இருக்கிறது.

தனி மனித ஒழுக்கம் என்பது அவரவர் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் இருந்து தொடங்குகிறது என்கிறது, சித்த மருத்துவம். நமது சுற்றுச்சூழலில் நடக்கும் மாற்றங்கள் நம் உடலிலும் மாற்றத்தை உண்டாக்கும். உடல் இயக்கங்களும் அதன் அடிப்படை யிலேயே நடக்கும். இதை உயிரியல் கடிகாரத்திற்கு ஒப்பாக சொல்லலாம்.

சித்த மருத்துவம் இந்த உயிரியல் கடிகாரத்தை ஒட்டி உடலில் உண்டாகும் நிகழ்வுகளுக்கு ஏற்ப நாள் ஒழுக்கங்களை அமைத்து வாழ்வியல் முறையோடு இணைத்துள்ளது. சூரியன் எழும் முன் விழித்துஎழுவது இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கான முதற்படி.

சூரியனை ஆதாரமாக கொண்டு ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என ஆறு பொழுதுகளாக பிரித்துள்ளனர். வைகறை என்பது சூரியன் உதயமாவதற்கு தொண்ணூறு நிமிடங்களுக்கு முன் அதாவது 4.30 மணிக்கு துயில் எழுவது மிக சிறந்த நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரம் பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப் படுகிறது.

இந்த நேரத்தில் சுற்றுப்புறம் மிக அமைதியாக, குளிர்ந்து இருக்கும். மனம் மிக தெளிவாக இருக்கும். புதிய நல்ல சிந்தனைகள் உருவாகும். நினைவாற்றல் அதிகமாக இருக்கும். நாம் செய்யும் வேலைகளை சிறப்பாக செய்ய இயலும். யோகாசனங்கள், தியானம், மூச்சு பயிற்சி செய்ய உகந்த நேரம் இது. மாணவர்கள் படிப்பதற்கும், ஓவியங்கள் வரைவதற்கும்- பாடகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் சிறந்த நேரம் இது.

இரவு முழுவதும் நாம் தூங்கினாலும் அப்போதும் நம் உடலில் வளர்சிதை மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். இதனால் காலையில் நாம் விழித்து எழும்போது உடல் சூடாக இருக்கும். வைகறை பொழுதில் சுற்றுச்சூழல் குளுமையாக இருப்பதால் உடல் சூடு சீராகும். உடலில் வாத, பித்த, கபம் சமநிலையில் இருக்கும், ஆரோக்கியம் மேம்படும்.

காலையில் உடலில் உள்ள கழிவுகள் நன்கு வெளியேறினால், உள்ளுறுப்புகள் சீராக செயல்படும். திட்டமிட்டு செயல்பட முடியும். உடல் ஆரோக்கியத்திற்கு நாளமில்லா சுரப்பிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. கார்டிசால் என்ற சுரப்பி அதிகாலையில் சுரக்க ஆரம்பித்து, மதியம் வரை உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து இரவு குறைந்து விடும்.

கார்டிசால் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் மன பதற்றம், மன அழுத்தம் போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டது. நாம் பரபரப்பாக செயல்படும்போது இது மிகவும் அதிகரித்து ரத்த அழுத்தத்தை உயர்த்தும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைகூட்டும். ஜீரண சிக்கலை ஏற்படுத்தும். கார்டிசால் ஹார்மோன் இயற்கையாக அதிகரிக்கும் வேளையே நாம் ஆக்கபூர்வமான வேலைகளை செய்ய உகந்த நேரம். கார்டிசால் குறைந்த காலத்தில் நாம் பரபரப்பான வேலைகளை செய்தால் மனபதற்றமும், மனநெருக்கடியும் உருவாகி உடல்-மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.

இன்று இளம் பெண்கள் பலருக்கு மாதவிடாய் பிரச்சினை உள்ளது. அவர்கள் இரவில் அதிக நேரம் கண்விழித்து, காலை தாமதமாக எழுவதுதான் அதற்கு முக்கிய காரணம். இரவில் அதிக நேரம் விழிக்கும்போது, இரவில் சுரக்கும் ஹார்மோன் களின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. பல்வேறு வாழ்வியல் நோய்கள் உருவாக அது காரணமாக இருக்கிறது.

வைகறையில் துயில் எழுவது ஆரோக்கியத்தின் முதற்படி. இதை அன்றாட வழக்கமாக்கி உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் காக்க உறுதி ஏற்போம்!

கட்டுரை: டாக்டர். இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை.

அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மனஅழுத்தம் ஏற்படாது. அதிகாலை எழுவதற்கு இரவு 10.30 மணிக்குள் தூங்கி விட வேண்டும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக இரவு உணவை எடுத்து கொள்வது சிறந்தது. இரவு எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்பது சிறந்தது.

பெரியவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். பதினெட்டு வயது வரை உள்ளவர் களுக்கு எட்டு மணி நேர உறக்கம் மிகவும் தேவை. குழந்தைகளை பத்து மணிக்குள் தூங்கவைத்து அதிகாலை ஐந்து மணிக்கு விழிக்கச்செய்ய வேண்டும். அதன் மூலம் குழந்தை களின் செயல்திறன் அதிகரிக்கும். நினைவாற்றல் பெருகும். கற்றல் குறைபாடுகள் நீங்கும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். இரவில் குறித்த நேரத்தில் தூங்கினால், உடலில் வளர்சிதை மாற்றங்கள் சிறந்த முறையில் நடைபெற்று உடல் இயக்கங்கள் சரியாக நடைபெறும்.
Tags:    

Similar News