பொது மருத்துவம்
காய்கறி, பழத்தோலிலும் சத்துக்கள் உண்டா?

காய்கறி, பழத்தோலிலும் சத்துக்கள் உண்டா?

Published On 2022-04-05 06:07 GMT   |   Update On 2022-04-05 09:05 GMT
சிலவகை பழங்கள், காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. ஏனெனில் அவற்றின் தோல், விதைகளில்தான் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு பெரும்பாலானோர் அவற்றின் வெளிப்புற தோலை நீக்கிவிடுவார்கள். உள்ளே இருக்கும் விதைகளையும் குப்பையில் போட்டுவிடுவார்கள். ஆனால் சிலவகை பழங்கள், காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. ஏனெனில் அவற்றின் தோல், விதைகளில்தான் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அவை உடல் நலனை பேணுவதற்கும் உதவுகின்றன.

தர்ப்பூசணி பழத்தின் தோலில் வைட்டமின் ஏ, சி, துத்தநாகம், மெக்னீசியம் போன்றவை நிறைந்திருக்கின்றன. கிவி பழ தோலில் வைட்டமின் சி, நார்ச்சத்துகள், பிளவனாய்டுகள் உள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. வெள்ளரிக்காய் தோலில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் வைட்டமின் கே நிறைந்துள்ளது.

உருளைக்கிழங்கு தோலில் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் சி உள்பட ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. பூசணி தோலில் ஆன்டிஆக்சிடென்டுகள், பீட்டா கரோட்டின் நிரம்பியுள்ளன. அவை விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுத்து சருமத்திற்கு பொலிவும் சேர்க்கும்.

கேரட் தோலில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலையும் தடுக்கும். வயிற்றுக்கும் இதமளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றின் தோல்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால் அவை உடல் எடை குறைவதற்கு உதவும். ஆரஞ்சு தோல்களில் இருக்கும் பிளவனாய்டுகள், நார்ச்சத்துகள், மெக்னீசியம் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. புற்றுநோயை தடுக்கும் தன்மையும் கொண்டவை.

பீர்க்கங்காய் தோலில் வைட்டமின் ஏ, பி 2, பி 3 மற்றும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. ஆப்பிள் தோலில் பாலிபினாலும், முலாம்பழ தோலில் பலவகை வைட்டமின்கள், புரதங்களும் உள்ளன. வாழைப்பழ தோலில் வைட்டமின் பி 6, பி 12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கின்றன.

வட இந்தியாவில் தர்ப்பூசணி தோலை பயன்படுத்தி அல்வா தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. தென்னிந்தியாவிலும் பூசணி, பீர்க்கங்காய் தோலை பயன்படுத்தி சட்னி, குழம்பு தயாரிக்கும் நடைமுறை இருக்கிறது. பூசணி விதையும் ஆரோக்கியமான உணவு வகையை சேர்ந்தது. இதில் ஒமேகா 6 கொழுப்புகள் அதிகம் உள்ளன. சாலட், தின்பண்டங்கள், இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பில் அவை சேர்க்கப்படுகின்றன.
Tags:    

Similar News