உடற்பயிற்சி

தியானம் என்ன சாதிக்கிறது?

Published On 2022-06-28 04:46 GMT   |   Update On 2022-06-28 04:46 GMT
  • வாழ்க்கை ஒட்டாது இருக்கத் தெளிவாய் பலதும் புலப்படும்.
  • தனிமை தியானத்தை வலுப்படுத்தும்.

தியானம் தெளிவின் துவக்கம்.

தியானம் மனதை, அதாவது எண்ணத்தை இல்லாது செய்யும் முயற்சி. வேறொரு கோணத்தில் எண்ணம் எங்கே தோன்றுகிறதோ அங்கேயே நிற்கும் கலை. நிற்க, எண்ணங்கள் தோன்றுகிற போதே அதை புனிதப்படுத்தும் செயல் உன்னை அறியாது நடைபெறும்.

ஆரம்பகட்ட தெளிவுகள் வந்து விடும். வம்புக்கு போகாத அமைதி ஏற்படும். கனவுகளில் மூழ்காத நிதானம் வரும். சொற்களில் பரபரப்பு இருக்காது. பதட்டம் ஏற்படாது.

கும்பலிலிருந்து பிரியும் எண்ணம் வரும். தனிமை தியானத்தை வலுப்படுத்தும். தியானம் தனிமையினை அதிகப்படுத்தும். தியான பலத்தால் எண்ணம் தோன்றும் போதே ஏன் எது என்கிறது சடசடவென்று புரியும். செயல் சுத்தமாகும், தெளிவாகும்.

கோபம் குறைய நியாயங்கள் தெளிவாய் தெரியும்.

ஆத்திரம் குறைய நல்லது கெட்டது எது என்று அறிய முடியும்.

எவரோடும் பிணக்கு வர முடியாது. கைகோர்த்து அலைந்தால்தான் நட்பா. கைகோர்த்து அலைந்தவன்தானே கன்னத்தில் இடிக்கிறான்.

கையும் கோர்க்க வேண்டாம். கைகலப்பும் வர வேண்டாம். ஒரு அடி விலகியே நில். விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. பிரியமும் இல்லை. அலட்சியமும் இல்லை.

வாழ்க்கை ஒட்டாது இருக்கத் தெளிவாய் பலதும் புலப்படும்.

Tags:    

Similar News