உடற்பயிற்சி

தொடை முதல் பாதம் வரை உறுதியாக்கும் உத்கட் கோணாசனம்

Published On 2022-07-05 07:29 GMT   |   Update On 2022-07-05 07:29 GMT
  • தீவிர இடுப்புப் பிரச்சினை, முட்டி வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
  • இடுப்புப் பகுதியை வலுவாக்கவும், விரிக்கவும் செய்யும் உத்கட் கோணாசனம்

வடமொழியில் 'உத்கட' என்றால் 'பலம் நிறைந்த' மற்றும் 'தீவிரமான' என்றும் 'கோண' என்றால் 'கோணம்' என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Goddess Squat என்று அழைக்கப்படுகிறது.

இடுப்புப் பகுதியை வலுவாக்கவும், விரிக்கவும் செய்யும் உத்கட் கோணாசனம் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இவ்வாசனத்தைப் பயில்வதால் ஆளுமை, ஆற்றல் ஆகியவைப் பெருகிறது; படைப்புத் திறன் கூடுகிறது.

பலன்கள்

உடல் முழுவதற்கும் ஆற்றல் அளிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய நலனை பாதுகாக்கிறது. தொடை முதல் பாதம் வரை உறுதியாக்குகிறது.

மூட்டுகளைப் பலப்படுத்துகிறது. சையாடிக் வலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. குழந்தை பாக்கியம் ஏற்பட உதவுகிறது.

சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது. உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. மனதை ஒருமுகப்படுத்துகிறது.

செய்முறை

விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். கால்களுக்கிடையில் சுமார் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்கவும். பாதங்களை வெளிப்புறமாகத் திருப்பவும்.

மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பைச் சற்றுக் கீழிறக்கவும். கால் முட்டியும் கணுக்காலும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். கைகளைத் தலைக்கு மேலாக உயர்த்தவும். உள்ளங்கைகள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும்.

30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்நிலையில் இருக்கவும்.

குறிப்பு

தீவிர இடுப்புப் பிரச்சினை மற்றும் தீவிர முட்டி வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

கைகளை மேல் நோக்கித் தூக்குவதில் சிரமம் உள்ளவர்கள் மார்புக்கு முன்னால் இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து வைக்கலாம்.

Tags:    

Similar News