உடற்பயிற்சி

இன்று சர்வதேச யோகா தினம்: உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா அவசியம்

Update: 2022-06-21 01:46 GMT
  • 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை.

ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா அவசியம் என்றே கூறலாம். யோகா என்பது மதம் சார்ந்த பயிற்சி அல்ல. அது, நமது முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய அற்புதமான கலை என்று கூட கூறலாம். மேலும் யோகா பயிற்சி செய்வதால் மாணவர்கள் கவனச்சிதறல் இன்றி கல்வி கற்கலாம்.

இந்தியாவின் புராதன பொக்கிஷமான யோகாவை, உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி உலகம் முழுவதும் வாழும் மக்கள் பழமை வாய்ந்த யோகாசனங்களை செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதற்கு ஒரு நாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி டெல்லியில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும், 2019-ம் ஆண்டு ராஞ்சியிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை. யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக ஏற்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து, அறிவுறுத்தி வருகிறார்.

மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும். ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு - இவற்றில் எதைத்தேடினாலும்... உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும்... உள்நிலை மாற்றம்தான் நோக்கம் என்றாலும் யோகா பயிற்சிகள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிக சுலபமாய் கையாள வழி ஏற்படுத்தி கொடுக்கும். யோகா பயிற்சி மேற்கொள்வதால், முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது.

ஞாபக சக்தி, மனம் குவிப்பு திறன், செயல்திறன் போன்றவை மேம்படுகிறது. உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகள் உறுதியடைகின்றன. முதுகு வலி, மன அழுத்தம், பயம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கிறது. நாட்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வேலை செய்யும் இடத்தில், குழுவாக பணியாற்றும் திறன் மற்றும் தகவல் பரிமாறும் திறன் மேம்படுகிறது. அமைதியும், ஆனந்தமும், நீடித்து நிலைத்திருக்க செய்கிறது.

Tags:    

Similar News