உடற்பயிற்சி

நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளைப் போக்கும் துவபாத தனுராசனம்

Update: 2022-08-05 05:21 GMT
  • முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது.
  • துவபாத தனுராசனம் சேதுபந்தாசனத்தின் ஒரு மாற்று வகையாகும்.

வடமொழியில் 'துவ' என்றால் 'இரண்டு', 'பாத' என்றால் 'கால்' மற்றும் 'பாதம்' மற்றும் 'தனுர்' என்றால் 'வில்' என்று பொருள். இவ்வாசனம் ஒரு வகையில் தனுராசனத்தின் ஒரு வடிவமாகவும் கருதப்படலாம். துவபாத தனுராசனம் ஆங்கிலத்தில் Bridge Pose on Elbows என்று அழைக்கப்படுகிறது.

துவபாத தனுராசனத்தில் எட்டு முக்கிய சக்கரங்களும் தூண்டப்படுகின்றன. எட்டு சக்கரங்களும் தூண்டப்படுவதால் உடலின் இயக்கம் அற்புதமாக மேம்படுத்தப்படுகிறது. உடல் மற்றும் மன நலம் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறது.

பலன்கள்

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. கழுத்து, மார்பு பகுதிகளை விரிக்கிறது. உடல் முழுவதும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

அனைத்து சுரப்புகளின் இயக்கங்களையும் சீராக்கி உடல் நலத்தை மேம்படுத்துகிறது. உடல் முழுவதிலும் ஆற்றலை அதிகரிக்கிறது. தோள்களையும் கரங்களையும் பலப்படுத்துகிறது. தைராய்டு இயக்கத்தை மேம்படுத்துகிறது. நுரையீரலைப் பலப்படுத்தி நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளைப் போக்குகிறது

இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இருதய நலனைப் பாதுகாக்கிறது.

இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்பு, வயிறு மற்றும் தொடையில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது. மறு உற்பத்தி உறுப்புகளின் இயக்கத்தைத் தூண்டுகிறது; குழந்தையின்மை பிரச்சினையைப் போக்க உதவுகிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்கிறது; மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளைப் போக்க உதவுகிறது. கால் தசைகளை உறுதியாக்குகிறது. மூட்டுகளைப் பலப்படுத்துகிறது. தூக்கமின்மையைப் போக்குகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. கவனத்தை கூர்மையாக்குகிறது

மன அழுத்தத்தைப் போக்குகிறது. மன அமைதியை வளர்க்கிறது.

செய்முறை

விரிப்பில் படுக்கவும். கால்களை மடக்கி இரண்டு பாதங்களையும் தரையில் வைக்கவும். கணுக்கால், முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும். கைகள் நீட்டியிருக்க வேண்டும்.

கைகளை உயர்த்தில் தலைக்குப் பின்னால் கொண்டு செல்லவும். பின் கைகளை மடக்கி உள்ளங்கைகளைத் தலைக்கு அருகில் விரல்கள் தோள்களை நோக்கியிருக்குமாறு தரையில் வைக்கவும்.

மூச்சை உள்ளிழுத்தவாறு, உள்ளங்கைகளையும் பாதங்களையும் பலமாகத் தரையில் ஊன்றி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும். தலையைத் தரையில் வைத்து, கைகளை மடக்கி முன்கைகளைத் தலைக்கு அருகில் தரையில் வைக்கவும். கைகளை நன்றாக ஊன்றித் கழுத்தை மேலும் பின்னோக்கி சாய்த்து, நெற்றியைத் தரையில் வைக்கவும்.

30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். பின் உடலைத் தளர்த்தித் தரையில் படுத்துக் கால்களையும் கைகளையும் நீட்டவும்.

தோள், கழுத்து, இடுப்பு மற்றும் முதுகுத்தண்டில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள், தீவிர மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் துவபாத தனுராசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

இடுப்பை உயர்த்துவது கடினமாக இருந்தால், இடுப்பின் கீழ் yoga block வைத்துப் பழகவும்.ஆசனத்தின் கடினத்தன்மையை மேலும் அதிகரிக்க விரும்பினால், குதிகால்களை உயர்த்தி கால் விரல்களைத் தரையில் வைத்து ஆசனத்தைப் பழகலாம்.

Tags:    

Similar News