லைஃப்ஸ்டைல்

‘ஸ்மார்ட் போன்’களும், பெற்றோர்களின் கடமையும்

Published On 2019-03-05 04:59 GMT   |   Update On 2019-03-05 05:00 GMT
இந்தக் காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோருடைய மனதையும் எந்தளவுக்கு ‘பேஸ் புக்’, இன்ஸ்டாகிராம், ‘வாட்ஸ் அப்’ எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோருடைய மனதையும் எந்தளவுக்கு ‘பேஸ் புக்’, இன்ஸ்டாகிராம், ‘வாட்ஸ் அப்’ எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. டாஸ்மாக் பற்றி கருத்து சொல்லும் நாம் அதை ஒழிப்பதே மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற ஒருமித்த கருத்தை சொல்லி விடுவோம். அதைபோல் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’பை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று நம்மால் சொல்ல முடியாது.

அதில் பல நன்மைகளும் இருக்கின்றன. ஆனால் இன்று பெரும்பாலான மாணவர்கள் தேடிப் போவது தீமைகளை நோக்கித்தான். அதையும் நம்மால் மறுக்க முடியாது. அதனால் இன்றைய பெற்றோர்கள் நிலை இரு தலைக்கொள்ளி எறும்பு நிலை தான். பத்து, பதினைந்து வயசு பள்ளிச் சிறுவர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் கூட தங்களுடைய பெரும்பான்மையான நேரத்தை ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’பில் தான் கழிக்கிறார்கள். அவர்கள் செயல்களை கவனித்துப் பார்த்தால், அவர்கள் படிப்பு தொடர்பாகவோ, எதிர்கால முன்னேற்றத்திற்குரிய செய்திகளையோ அவர்கள் அதில் பார்ப்பதில்லை.

அவர்களின் பள்ளித் தோழிகள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் படங்களையும் இதர செய்திகளையும் தான் பரிமாறிக்கொள்கிறார்கள். அல்லது அவர்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகள் புகைப்படங்கள், பார்த்த சினிமா, அதைப் பற்றிய கருத்துகளே அதில் நிறைந்திருக்கும். அவர்கள் தங்கள் பாட சம்பந்தமாகவோ வேறு நல்ல விஷயங்களையோ அவர்கள் பரிமாறிக்கொள்வதாக தெரியவில்லை. கல்லூரி மாணவர்கள், அவர்கள் வயதை ஒத்த இளைஞர்களின் பேஸ் புக், வாட்ஸ் அப் செய்திகள் இன்னும் மோசமாக இருக்கின்றன.

தங்களுக்குப் பிடித்த நடிகைகளின் கவர்ச்சி படங்கள், அவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய செய்திகள், தங்களுடைய வீர தீர செயல்களைக் காட்டும் பல போஸ்களில் போட்டோக்கள், அவைகளுக்கு ‘லைக்’குகள், ‘கமெண்ட்ஸ்’கள் என்று அவர்கள் படிக்க வேண்டிய நேரங்களை எல்லாம் இந்த ‘வாட்ஸ் அப்’பும், ‘பேஸ் புக்’கும் விழுங்கியிருக்கும். அதோடு அவர்கள் நிற்பதில்லை. இணையதளங்களில் இருந்து நிறைய ஆபாச வீடியோக்களை எடுத்து, அதை தங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறார்கள்.

அல்லது புலி, சிங்கம் மனிதனை அடித்துக் கொல்லும் காட்சி, இயற்கைப் பேரழிவுகள் நாடு நகரங்களை அழிக்கும் காட்சிகள் அதில் நிறைந்திருக்கும். கல்லூரி மாணவர்களுக்கு ‘அரியர்ஸ்’ அதிகம் ஏற்படக் காரணம் அவர்களின் படிப்புக்குச் செலவிட வேண்டிய நேரம் முழுவதையும் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ எடுத்துக் கொள்வது தான். இளைஞர்களும், யுவதிகளும் வீட்டில் தங்கள் அறைக் கதவை மூடிவிட்டு, பேஸ் புக்கில் மூழ்கி இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ‘சாட்டிங்’கில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

அது இன்னும் மோசமாகப் போய் முடிகிறது. ஆரம்பத்தில் ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும் பொதுவான விஷயங்களையே பேச ஆரம்பிப்பார்கள். போகப் போக தங்கள் குடும்ப விஷயங்களைப் பரிமாறி, மெதுவாக அந்தரங்கமான விஷயங்களைப் பேசி, தங்களுடைய கவர்ச்சிப் படங்களை பரிமாறும் நிலைக்குப் போய் விடுவார்கள். பின்னர் செல்போனில் பேச்சு தொடரும். பின்னர் நேரில் சந்திக்க விரும்புவார்கள். அதன் பின் இருவரும் சேர்ந்து அவரவர் குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிடுவார்கள்.

ஒரு வாலிபனின் தந்தை மேல் நடுரோட்டில் லாரி மோதி விட்டது. அந்தச் செய்தியைச் சொல்ல ஒருவர் அவனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அந்த மாணவன் ‘சாட்டிங்’கில் மும்முரமாக இருந்ததால் அவன் செல்போனை எடுக்கவில்லை. அவன் தந்தை சரியான உதவியின்றி நடு ரோட்டில் உயிர்விட நேர்ந்தது. இதையெல்லாம் பார்க்கும் போது அறிவியல் சாதனையால் நமக்கு கிடைத்த சமூக வலைத்தளங்களால் மாணவ, மாணவிகளுக்கு பெரிய அளவில் நன்மை கிடைப்பதாகத் தெரியவில்லை.

பெரியவர்களும் மாணவ, மாணவிகளுக்கு புத்தி சொல்லும் தகுதியை இழந்து வருகிறார்கள். இன்று அவர்களும் நிறைய நேரத்தை அதில் செல விடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், பிரபலங்களாக இருக்கும் அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள் என்று பல ஆயிரம் ‘பேஸ் புக்’ நண்பர்கள் அவர்களுக்கு இருப்பார்கள். நடிகர் நடிகைகள் அவர்கள் நடித்த படம், அவர்களுக்கு கிடைத்த சிறப்புகள் பற்றியும், எழுத்தாளர்கள் அவர்கள் எழுதி வெளிவந்த கதை, கட்டுரைகள் பற்றிய செய்திகளையும், அரசியல்வாதிகள், அவர்களுக்கு கிடைத்த பதவி, மாலை மரியாதைகளைப் பற்றிய செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள்.

பேஸ் புக்கில் இருக்கும் நண்பர்கள் விழுந்து விழுந்து ‘லைக்’ போடுவார்கள். பலர் ‘கமெண்ட்ஸ்’ என்ற பெயரில் மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்து பாராட்டுப் பத்திரங்கள் படிப்பார்கள். அதை அந்தப் பிரபலங்கள் தங்களுக்கு எத்தனை ‘லைக்ஸ்’ கிடைத்தன என்று பத்திரிகைகளில் தம்பட்டம் அடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள். அவர்கள் பெருமை பேசிக்கொள்ள காரணமாக இருந்த ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் அவர்களுக்கு கிடைத்த ஒரு பாராட்டையோ, அல்லது ஒரு நல்ல கருத்தையோ தங்கள் ‘பேஸ் புக்’கில் போட்டால் எந்தப் பிரபலங்களும் ‘லைக்’ கூட போடாது.

சாதாரண மக்கள் அவர்களைப் பொறுத்தவரை உயிர் இல்லாத பொம்மைகள்தான். அவருக்கு லைக் போடுவதும், பாராட்டுத் தெரிவிப்பதும் அவர்களுக்கு முன் பின் தெரியாத அந்த சாதாரண மக்கள் தான். நிறையப் பேர் பிரபலங்களுக்குத் துதி பாட தங்கள் வாழ்க்கையில் நிறைய நேரத்தை செலவிடுகிறார்கள். பொதுவாகப் பார்க்கும் போது இந்தப் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ மோகத்தால் மனிதனின் நேரமும், ஆற்றலும் வீணடிக்கப்படுகிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துகளில் இருந்து கூட இன்றைய இளைய தலைமுறை தப்பித்துக்கொள்ள முடியும்.

இந்தப் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ மோகத்திலிருந்து தப்பிக்க வழியே இல்லை போலிருக்கிறது. மாணவ, மாணவிகளுக்கு இந்த மோகம் நல்லதல்ல. அதை எப்படியாவது பிரியமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்து, அவர்களை ஸ்மார்ட் போன் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு ‘ரோல் மாடல்’ என்று சொல்வார்கள்.

நம்மிடம் இருக்கும் குறைகள் தான் அவர்களிடமும் படியும். நாமே எந்த நேரமும் ஸ்மார்ட் போனும் கைகளுமாக இருந்தால், நம் குழந்தைகளுக்கு எப்படி அதன் தீமையை எடுத்துச் சொல்வது. குழந்தை வளர்ப்பில், ஸ்மார்ட் போன்கள் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை பாதிக்காதபடி பார்த்துக்கொள்வது, பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கடமையாக இன்று மாறிவிட்டது.

துடுப்பதி ரகுநாதன்
Tags:    

Similar News