கால்பந்து

அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன்- மெஸ்சியின் ஓய்வு முடிவில் மாற்றம்?

Published On 2022-12-19 08:55 GMT   |   Update On 2022-12-19 08:55 GMT
  • உலக கோப்பையை வெல்வது எனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன்.
  • கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டியில் ஆடுவேன்.

தோகா:

உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி ஆட்டம், அதோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மெஸ்சி அறிவித்து இருந்தார்.

குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதியில் பெற்ற வெற்றிக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் இதை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் உலக கோப்பையை வென்று கனவு நனவானதால் மெஸ்சி தனது ஓய்வு முடிவை மாற்றியுள்ளார். அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் ஆடுவேன் என்று அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உலக கோப்பையை வெல்வது எனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன். உலக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன். உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புகிறேன். கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டியில் ஆடுவேன்.

உலக கோப்பைக்காக நான் மிகவும் ஏங்கினேன். கடவுள் இந்த பரிசை அளிப்பார் என்று முன்பே சொன்னேன். இந்த நேரத்தில் அது நடக்கும் என்பதை உணர்ந்தேன். இதற்காக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இறுதியில் எங்களால் அதை வெல்ல முடிந்தது. உலக கோப்பை அழகானது.

இவ்வாறு அவர் கூறினார்.

35 வயதான லியோனல் மெஸ்சி 2005-ல் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அர்ஜென்டினா அணிக்காக 172 போட்டியில் விளையாடி 98 கோல்கள் அடித்துள்ளார்.

Tags:    

Similar News