வழிபாடு

திருவனந்தபுரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலைகளை படத்தில் காணலாம்.

கேரளாவில் சித்திரை விஷூ பண்டிகை கொண்டாட்டம் நாளை நடக்கிறது

Published On 2023-04-14 09:01 GMT   |   Update On 2023-04-14 09:01 GMT
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் குவிந்துள்ளனர்.
  • குடும்பம் குடும்பமாக கோவில்களுக்கு வந்து கனி கண்டு வழிபாடு நடத்துவார்கள்.

கேரளாவில் மாநிலம் முழுவதிலும் விஷூ பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி ஐஸ்வரியம் பெருகவும், செல்வம் கொழிக்கவும், கிடைத்த செல்வம் நிலைக்கவும் வேண்டி கோவில்கள், வீடுகளில் விஷூ கனி கண்டு மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம். மக்கள் அவரவர் வீடுகளில் விஷூ பண்டிகையை கொண்டாடுவார்கள். அப்போது குடும்பத்தினர்களுக்கு வீட்டில் உள்ள முதியவர்கள் புத்தம் புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை கை நீட்டமாக வழங்கி மன நிறைவுடன் கொண்டாடும் ஐஸ்வர்ய விழா விஷூ பண்டிகையாகும்.

இதை முன்னிட்டு கேரளாவில் அனைத்து கோவில்களிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து விஷூ கனி தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கேரள மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து குடும்பம் குடும்பமாக கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் நடத்தி கனி கண்டு வழிபாடு நடத்துவார்கள். வீடுகளிலும் கிருஷ்ணனை அலங்கரத்து மலர் மாலை அணிவித்து புத்தாடை, கண்ணாடி, காய்கறி, பழங்கள், கனிக்கொன்றை பூக்களை வைத்து கனி காணும் சடங்கு நடத்தப்படும்.

சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 11-ந் தேதி திறக்கப்பட்டது. 12-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. விஷூ பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை வழக்கத்தை விட முன்னதாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து சாமி ஐயப்பனின் கனி காணுதலுக்கு பிறகு பக்தர்கள் காலை 7 மணி வரை கனி கண்டு தரிசனம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. விஷூ கனி தரிசனம் காண ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் குவிந்துள்ளனர். விஷூவை முன்னிட்டு கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள்.

அதேபோல், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் விஷூ வழிபாடுகள் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி கோவில் நடை நள்ளிரவு 2.30 மணிக்கு திறக்கப்படுகிறது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், கரிக்ககம் சாமுண்டி தேவி

கோவில், சிறையின்கீழ் சார்க்கரை தேவி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் விஷூ பண்டிகை கையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

விஷூ பண்டிகையையொட்டி கனி காணலின் போது கிருஷ்ணனை அலங்கரித்து, புத்தாடை, காய்கனிகள், கனிக்கொன்றை மலர்கள், ஆபரணங்கள், ஆரன்முளா கண்ணாடி ஆகியவற்றுடன் வைத்து கேரள மக்கள் வழிபாடுகளை நடத்துவார்கள். இதையொட்டி திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் கிருஷ்ணன் விக்ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News