வழிபாடு

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

Published On 2023-06-08 03:39 GMT   |   Update On 2023-06-08 03:39 GMT
  • இன்று திருக்கல்யாணமும், சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
  • விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபஆராதனையும் நடைபெற உள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ராமநாதபுரம் சமஸ்தான மற்றும் தேவஸ்தான தர்மகர்த்தா ராணி பிரம்ம ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் உள்ள வெயில் உகந்த விநாயகரை ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் வழியில் பூஜித்து சென்றதாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மிக பழமையான இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 4-ம் கால யாக பூஜையும், பூர்ணகுதி, தீபாராதனையும், 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 7.45 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், கோபூஜையும், நாடிசந்தானமும், காலை 9.45 மணிக்கு மகாபூர்ணகுதி, தீபாராதனையும், காலை 10.45-க்கு மேல் 11.45-க்குள் விநாயகருக்கு கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய தெய்வங்களுடன் திருக்கல்யாணமும், சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து உலக நன்மைக்காக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபஆராதனையும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண சுற்று வட்டார பக்தர்களும், ராமநாதபுரம் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News