வழிபாடு

தெலுங்கு புத்தாண்டு தினம்: சென்னை கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-03-22 07:21 GMT   |   Update On 2023-03-22 07:21 GMT
  • யுகாதி ஆஸ்தானம் பூஜையின் போது வழிபட ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
  • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை தி.நகர் வெங்கட் நாராயண சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் இன்று தெலுங்கு புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இங்கு அதிகாலை 5 மணி மணிக்கே நடை திறக்கப்பட்டது. காலை முதலே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

காலை 9.20 மணிக்கு யுகாதி ஆஸ்தானம் என்ற சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. யுகாதி ஆஸ்தானம் பூஜையின் போது வழிபட ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாலை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

சென்னை தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலிலும் இன்று தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இங்கும் காலை 9.20 மணிக்கு யுகாதி ஆஸ்தானம் என்ற சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

திருவொற்றியூர் கோமாதா நகர் மாட்டு சந்தை பகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள விநாயகர் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தெலுங்கு பேசும் மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தெலுங்கு புத்தாண்டையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெலுங்கு புத்தாண்டையொட்டி இன்று நவகலச பூஜை என்ற சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இதேபோல் சென்னை யில் உள்ள வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், கந்த கோட்டம் முருகன் கோவில், மண்ணடி காளி காம்பாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் தெலுங்கு வருடப்பிறப்பை யொட்டி இன்று வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

Similar News