வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை ஆவணித்திருவிழா தேரோட்டம்

Published On 2023-09-12 05:00 GMT   |   Update On 2023-09-12 05:00 GMT
  • பச்சை சாத்தி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிறபட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பிரம்மா அம்சமாக வீதிஉலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.

பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பகல் 12.05 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பெருமாள் அம்சமாக எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்கிறது.

தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்கிறது.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News