வழிபாடு

பனிமய மாதா சொரூபம் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளதையும், திருப்பலியில் பங்கேற்றவர்களையும் படத்தில் காணலாம்.

தூத்துக்குடி பனிமய மாதா சொரூபத்திற்கு தங்க முலாம் பூசும் பணி நாளை தொடங்குகிறது

Published On 2023-06-11 06:40 GMT   |   Update On 2023-06-11 06:40 GMT
  • தங்க முலாம் பூசும் பணி நாளை தொடங்க உள்ளது.
  • தங்கத் தேரோட்டம் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை பெருவிழா நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

மேலும் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடந்துள்ளது. இந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

அதன்படி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தூய பனிமயமாதா பேராலயத்தில் உள்ள மாதா சொரூபத்துக்கு தங்கமுலாம் பூசப்பட உள்ளது.

இதற்காக மாதாவின் சொரூபம், பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் பீடத்தில் இருந்து நேற்று இறக்கப்பட்டது. பின்னர் திருப்பலி, வழிபாடுகள் நடந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரோமன் கத்தோலிக்க தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு நிறைவுதினத்தை முன்னிட்டு, தூய பனிமயமாதா ஆலயத்தில் காலை 9 மணி முதல் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பீடத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் போப் ஆண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றுகிறார். இதில் ஆயர்கள், அருட்தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். நேற்று பீடத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட மாதா சொரூபத்தை திரளானோர் வந்து வழிபட்டுச் சென்றனர்.

இதனை தொடர்ந்து, தங்க முலாம் பூசும் பணி நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த பணி 10 முதல் 15 தினங்கள் நடைபெறும் எனவும், அதன் பின்னர் தூய பனிமயமாதா சொரூபம் மீண்டும் ஆலயத்தில் உள்ள பீடத்தில் வைக்கப்படும் என்று ஆலய நிர்வாகக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News