தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா: இன்று இரவு சப்பர பவனி நடக்கிறது
- இன்று அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
- நாளை 6-ந்தேதி கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 440-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்காத நிலையில், இந்த ஆண்டு வழக்கம் போல் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.
விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. 6-ம் திருவிழாவான கடந்த 31-ந் தேதி மாபெரும் நற்கருணை பவனி நடைபெற்றது.
இதில் கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பாகுபாடின்றி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
10-ம் திருவிழாவான நேற்று இரவு 7 மணிக்கு ஆயர் ஸ்டீபன் ஆன்டகை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. 9 மணிக்கு அன்னையின் திருஉருவ பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் இன்று அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியை தொடர்ந்து 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது.
இந்த கூட்டுத் திருப்பலியில் 50-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து காலை 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக கூட்டுத்திருப்பலியும், 10 மணிக்கு முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக கூட்டு திருப்பலி நடைபெற்றது.
பிற்பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மண்ணில் பிறந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் அருட்தந்தையர்கள், துறவிகள், அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நன்றி திருப்பலி நடந்தது.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெறுகிறது.
இன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருஉருவ சப்பர பவனி நடக்கிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய பனிமய மாதா நகரில் உள்ள முக்கிய வீதிகளில் பவனியாக வருவார்.
இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவு 10 மணிக்கு மரிய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும்.
நாளை 6-ந்தேதி காலை 5 மணிக்கு ஆலய உபகாரிகளுக்காகவும், பெருவிழா நன்கொடையாளர்களுக்காகவும் சிறப்பு நன்றி திருப்பலி நடைபெறும். 6.30 மணிக்கு 2-ம் திருப்பலி முடிந்ததும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு பனிமய மாதா ஆலயம் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது. மேலும் திருவிழாவால் தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.