வழிபாடு

திருவெள்ளறை ஸ்வஸ்திக் வடிவ கிணறு

Published On 2025-07-26 09:12 IST   |   Update On 2025-07-26 09:12:00 IST
  • ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.
  • மேற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் கிருஷ்ண பகவான் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி இடம் பெற்றுள்ளது.

திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, திருவெள்ளறை திருத்தலம். இந்த ஆலயத்தின் நேர்பின்புறமாக ஸ்வஸ்திக் வடிவ கிணறு ஒன்று காணப்படுகிறது. 'ஸ்வஸ்திக்' வடிவம் என்பது, ஆன்மிகக் குறியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த கிணறு ''மார்பிடுகு கிணறு'' என்று அழைக்கப்பட்டதாக அதில் உள்ள கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஸ்வஸ்திக் கிணறு கி.பி. 8-ம் நூற்றாண்டில், பல்லவ மன்னனான நந்திவர்மன் காலத்தில், ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவரால் கட்டப்பட்டது.

இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதன் எதிரில் பெரியதும், சிறியதுமாக இரண்டு நந்திகள் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதன் அருகில் பழங்கால தெய்வத் திருமேனிகள் காணப்படுகின்றன. தற்போது இந்த கிணறு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கிழக்கு பக்கவாசலின் முதல் நிலை படியில் நரசிம்மர் சிற்பமும், இரண்டாம் படி நிலையில் யானை வாகனத்தோடு அய்யனாரும், பூரணாம்பிகையும், மூன்றாம் படிநிலையில் இரண்டு அன்னப்பறவைகளும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் தெற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் சப்த மாதர்கள் காட்சி தருகின்றனர். இரண்டாம் படிநிலையில் கொற்றவை, சிங்கம் மான் மீது இரண்டு துணை தேவியர் உள்ளனர். மூன்றாம் படிநிலையில் விநாயகரின் உருவம் உள்ளது.

மேற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் கிருஷ்ண பகவான் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி இடம் பெற்றுள்ளது. இரண்டாம் நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணு, மூன்றாம் நிலையில் இரண்டு மகர சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு வாசலின் முதல் நிலைக்காலில் சிவபெருமான்- பார்வதியும், தேவர்களும் உள்ளனர். இரண்டாம் நிலைக்காலில் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் உள்ளனர். மூன்றாம் நிலைப்படியில் இரண்டு மகர தோரண அமைப்பு உள்ளது. நடுவில் யானை நடந்து வரும் சிற்பம் இருக்கிறது. கிணற்றுக்குள் நான்கு பக்கங்களில் இருந்தும் இறங்கி செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News